Show all

தலித் பெண் நந்தினி கொலை வழக்கு! மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டத்தில் தலித் இளம்பெண் நந்தினி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

     அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற இளம்பெண் கடந்த சனவரி 14-ஆம் தேதி கீழமாளிகை கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் நிர்வாணமான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் பிரமுகரான மணிகண்டன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து நந்தினியை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.

     இதனைத் தொடர்ந்து மணிகண்டனும் அவனது நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிகண்டனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்னும் ஒரு ஆண்டுக்கு மணிகண்டனால் பிணையில் கூட வெளியே வர முடியாது. மணிகண்டனை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள மற்ற மூவரில் மணிவண்ணன் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர் மணிகண்டனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

     தலித் பிரிவைச் சேர்ந்த நந்தினியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி உல்லாசம் அனுபவித்துள்ளான் மணிகண்டன். இதனால் நந்தினி கர்ப்பமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்டனை நந்தினி வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த தன்னால், தலித் சாதியைச் சேர்ந்த நந்தினியைத் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி அவரை கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளான் மணிகண்டன்.

     இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று மணிகண்டனும், அவனது நண்பர்களும் நந்தினியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் பிளேடால் அவரது பிறப்புறுப்பை அறுத்து, அவரின் வயிற்றில் இருந்த கருவை வெளியே எடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிக இரத்தப் போக்கால் நந்தினி அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளார். பின்னர் அவரது உடலை கல்லில் கட்டி, அருகிலுள்ள கிணற்றில் போட்டுள்ளனர். மேலும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக அதே கிணற்றில் நாய் ஒன்றை கொன்று, அதன் உடலையும் கிணற்றில் போட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.