05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து சேலத்திற்கு முன்பே இரண்டு சாலைகள் உள்ளன. மூன்றாவதாக ஒரு சாலையை, வெளிநாட்டினர் முதலீட்டுக்காக, அவர்களைக் கவரும் வகைக்காக, மரங்கள் போர்த்திய, அழகான எண்வழிச் சாலையாக அமைக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது. வனத்தையும், வேளாண் நிலத்தையும் அழித்து பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளை அப்புறப் படுத்தி அமைக்கப் படும் இந்தச் சாலைக்கு பசுமை வழிச்சாலை என்று பெயர் சூட்டப் போகின்றார்களாம் இருபுறமும் மரங்கள் நடுவதால். இப்படி நடப்பட்ட மரங்கள் சாலையை அழகு படுத்துமேயொழிய மழை பெற்றுத்தரும் பசுமை ஆக முடியாது. கூட்டம் கூட்டமாக இருக்கும் மரங்கள்தாம் மழையை ஈட்டித் தரும் பசுமை என்ற பெயருக்கு அடையாய் அமைய முடியும். இப்படி ஒத்தை ஒத்தையாய் வைக்கப் பட்ட மரங்கள் வர்தா புயலில் செங்கல்பட்டிலிருந்து சென்னை வரை வண்டிகள் மீதும், மனிதர்கள் மீதும், மின் கம்பங்கள்மீதும் சாலையின் மீதும் குறுக்காகச் சாய்ந்தும் பெரும் இழப்புகளை வழங்கி, ஏன் மரங்கள் நட்டோம்? என்ற கேள்வியை நமக்குள் உருவாக்கியது; ஆனாலும் இப்படி மரங்கள் நடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் தாம், மீண்டும் அதே வகையாக மரம் நட்டு அமைக்கப் போவது பசுமை வழிச்சாலை என்றே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் போகிறோம். இந்தச் சாலைத் திட்டத்துக்கு எதிராகவும், அதுமட்டுமல்லாமல் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் சேலம் சென்று அங்குள்ள நீர் நிலைகளைப் பார்வையிட்ட நடிகர் மன்சூன் அலிகான் இந்தச் சாலை திட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், இந்தச் சாலைத் திட்டத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக மூன்று நாட்களுக்கு முன்னர் காவல் துறையினர் மன்சூர் அலிகானைக் கைது செய்திருந்தனர். இந்தநிலையில், பியூஷ் மானுசும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் சேலம் ஓமலூர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சாலை திட்டத்திற்கு எதிராக பேசும் பலரும் தொடர்ந்து கைது செய்யப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



