காட்டுமன்னார்கோவில் அருகே சாலைமறியல் நடந்த இடத்தில் குடங்களை எட்டி உதைத்த துணைஆய்வாளரை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாட்டைமேடு கிராமம். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி ஊராட்சிக்கு உட்பட்டது.
தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் பிரச்னையை தீர்க்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனே தீர்வு காண வலியுறுத்தியும் சாட்டைமேடு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குமாராட்சி துணைஆய்வாளர் சண்முகம், வந்த வேகத்தில் கிராம மக்கள் வைத்திருந்த காலி குடங்களை காலனிகள் காலால் எட்டி உதைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து துணைஆய்வாளரை கிராம மக்கள் சிறைவைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமராட்சி ஆய்வாளர் வெற்றிவேல், காட்டுமன்னார்கோவில் துணைஆய்வாளர் ஷியாம் சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, துணைஆய்வாளரின் செயலுக்கு ஆய்வாளர் வெற்றிவேல் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும் குடிநீர் பிரச்னை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்க்கப்படும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து மறியலை கிராம மக்கள் கைவிட்டனர்.
மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் பிரச்னைக்கு அதிகாரிகள் விரைவில் தீர்வு காணாவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம், தேர்தலை புறக்கணிப்போம் என அவர்கள் எச்சரிக்கை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,121.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.