முதல்நாளில் தமிழ் பாடத்திற்கான தேர்வுடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. டெல்லியிலும்; நாளை 10, 12ம் வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடைபெறும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் நடுவண் இடைநிலைக் கல்விவாரியம் அறிவித்துள்ளது. 18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்தவு நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்நாளில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்கள் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு எழுதவுள்ளனர். நாளை தொடங்கும் பொதுத் தேர்வு: நாளது 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121ல் (24.03.2020) முடிவடைகிறது. மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில், மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1.15 வரை நடைபெறும். 3 மணி நேரத்துடன் கூடுதலாக 15 நிமிடங்கள் வினாத்தாளை படித்துப்பார்ப்பது உள்ளிட்டவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒட்டி முறைகேடுகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்தால் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. அத்துடன், காப்பி அடித்தல், விடைத்தாளை மாற்றி எழுதுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு கூடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், அவர்கள் 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. டெல்லியின் வடகிழக்கே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப் போராட்டத்தில் கலவரக்காரர்கள் நுழைந்து தாக்கியதில் நிகழ்ந்த வன்முறையில் 42 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 13 ஆயிரத்து 200 பேரிடம் இருந்து வேதனை தெரிவித்து காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன என கூறப்படுகிறது. 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 500 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வன்முறை காரணமாக டெல்லி வடகிழக்கு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இந்தக் கிழமை முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லியில் வருகிற நாளை திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்து, அனைத்து உதவிகளையும் அளிக்க காவல் துறை மற்றும் அரசுக்கு டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தேர்வு முடிவுகள்: 11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122ல் (24.04.2020) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 14 ஆயிரத்து 958 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



