அறங்கூற்றுமன்ற உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் மூடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அனுமதியை எளிமைப்படுத்த போராட்டம். இதனால் சென்னையில் குடுவைக் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் தூய்மையாக்கப்பட்ட குடுவைக் குடிநீர் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூய்மையாக்கப்பட்ட குடிநீர்- 1லிட்டர் 2லிட்டர் சீசாக்களில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் குடுவைக் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட மற்ற மாவட்டங்களிலும் கனவகை நீரேற்று அமைப்புகள் பொருத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி தூய்மையாக்கப்பட்ட குடுவைக் குடிநீர் விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால், நிலத்தடி நீர் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதியதாக குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதற்கு அனுமதி பெறுவது கடினமாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பல இடங்களில் அரசின் அனுமதி பெறாமல் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதாக அரசுக்கு புகார்கள் சென்றன. அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை புழலை சேர்ந்த சிவமுத்து என்பவர் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த அறங்கூற்றுவர்கள, அனுமதி பெறாமல் செயல்படும் நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் மூடி வருகின்றனர். தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 470 குடுவை குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1,689 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் 568 குடிநீர் உற்பத்தி நிறுவனம் மட்டுமே அனுமதி பெற்று செயல்படுகிறது. மற்ற நிறுவனங்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் செயல்படுகின்றன என்று அறியப்பட்டது. இதனால் சட்ட விரோதமாக செயல்படும் ஆலைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் 300-க்கும் மேற்பட்ட ஆலைகளை மூடி முத்திரை வைத்தனர். திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் வித்யா மேற்பார்வையில் 22 குடுவை குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 23 நிறுவனம் கரூரில் 8, கடலூரில் 28, விழுப்புரத்தில் 13, கிருஷ்ணகிரியில் 61, சேலம் 42, நாமக்கல்லில் 17, தர்மபுரியில் 9, ஈரோட்டில் 30 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடுவைக் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக குடுவைக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடைகளில் குடுவைக் குடிநீர் மூன்று மடங்குக்கு மேல் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:- நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு விரைவில் உருவாக்கி எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் எந்த அழைப்பும் வரவில்லை என்கிறார். மேலும்- மக்கள் நலன் கருதி உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிறார். இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ‘சட்டத்துக்கு உட்பட்டு குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி கொடுக்க அரசு தயாராக இருப்பதாகவும், அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ள வழிமுறையை அரசு பின் பற்றும் தெரிவிக்கிறார். சென்னையில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க குடிநீர் வாரியம் மூலம் மாற்று வழிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் நான்காவது நாளாக தொடரும் நிலையில், 20 லிட்டர் குடிநீர் குடுவை 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



