Show all

சிறந்து விளங்கினர் நீர் மேலாண்மையில்! தமிழக மன்னர்கள் அன்று; தமிழக மக்கள் இன்று.

தமிழகத்தில் தூர்ந்த குளங்கள் இல்லாத ஊர் என்று எதுவும் இருக்க முடியாது. இன்றைய ஆட்சியாளர்களால் பேண முடியாமல் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. பழந்தமிழ் மன்னர்கள் அத்தனைக் குளங்களை வெட்டியிருந்தனர் அன்று நீர் மேலாண்மைக்காக.  

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அன்றைக்கு தமிழ் மக்கள் குடும்பம் பிள்ளை குட்டி என்று குடும்பத்தை சிறப்பாக பேணி வர, பழந்தமிழ் மன்னர்கள் குளம் வெட்டியும் அணை கட்டியும் மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்தனர். 

இன்றைக்கு தமிழக ஆட்சியாளர்கள் குடும்பம் பிள்ளை குட்டி என்று குடும்பத்தை சிறப்பாக பேணி வர, தமிழக மக்களோ ஊரைத்திரட்டி காசைப் புரட்டி ஊர் ஊருக்கு இருக்கிற மன்னர் காலத்துக் குளங்களை தூர் வாரி வருகின்றனர்.

அந்த வகையாக இராசராச சோழன் காலத்தில் இருந்த பழைமையான குளத்தை மீட்டு தூர் வாரியத்துடன் அதைக் காப்பதற்காக சுமையூர்திகள் மூலம் தண்ணீர் நிரப்பி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடியுள்ளனர். தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியான பர்மா கடைவீதியின் அருகே உள்ள அழகிகுளத்தை.

இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட குளத்தை பொதுமக்கள் முயற்சி செய்து தங்கள் சொந்த செலவில் தூர் வாரியதுடன் சுமையூர்தி மூலம் தண்ணீர் நிரப்பி அந்தக் குளத்திலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடினர். 

இந்த குளம் காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளாலும், குப்பை கழிவுகளை கொட்டியதாலும் பயன்பாடு இல்லாமல் போனதுடன் முழுமையாக தூர்ந்து போனதோடு குளம் இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து கடந்த மாதத்தில் குளத்தை சுற்றியுள்ள மக்கள் குளத்தை தூர்வார வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் தங்களால் முடிந்த நிதியைக் குளத்தை தூர்வாருவதற்குக் கொடுத்தனர்.

குளத்தில் இருந்த குப்பை கழிவுகளைக் கொண்டே நான்கு புறமும் கரைகள் அமைத்தனர். மூன்று ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் தற்போது பரந்து விரிந்து காணப்படுகிறது. இன்று ஆடிப்பெருக்கு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகக் குளத்தின் மையப் பகுதியில் உள்ள பள்ளத்தில் 5 சுமையூர்திகள் மூலம் தண்ணீரை நிரப்பினர். 

முன்னதாக பொதுமக்கள் ஆடிப்பெருக்கை இங்கேயே கொண்டாட வேண்டும் என நேற்று காலை தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் திரண்டு வந்து படையலிட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடி வந்தனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு அழகி குளம் விழாக்கோலம் கண்டதைக் காண்பதற்கு ஏராளமானவர்கள் வந்து சென்றனர். பலர் குளத்தில் நின்று தம்படம் எடுத்துக் கொண்டனர்.

இராசராச சோழன் நீர் மேலாண்மைக்கு மிகவும் முதன்மைத்துவம் கொடுத்து ஆட்சி செய்து வந்தார். சிவகங்கை குளம், அய்யன் குளம், அழகி குளம் என 50-க்கும் மேற்பட்ட குளங்களை அமைத்துள்ளார். இந்தக் குளங்கள் அனைத்தும் தஞ்சாவூரின் நகர் பகுதியிலேயே அமைந்துள்ளன. அதில் இந்த அழகி குளம் என்பது தனிச் சிறப்பு பெற்றது. இந்தப் பகுதியில் வசித்த சொக்கியம்மாள் என்ற மூதாட்டி, இராசராச சோழன் பெரிய கோயில் கட்டும்போது அதில் கட்டடப் பணியாற்றிய அனைத்துப் பணியாளர்களுக்கும் அவர்களின் களைப்பும் தாகமும் தீர்வதற்கு இந்தக் குளத்திலிருந்து தண்ணீரும், நீர் மோரும் குடிப்பதற்குக் கொடுத்து வந்துள்ளார்.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இந்தக் குளத்தை தூர்வாரிவிட்டோம். இதிலேயே ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட வேண்டும் என நினைத்தோம். அதன்படி சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இதற்காக தற்சமயத்துக்கு சுமையூர்திகள் மூலம் தண்ணீர் நிரப்பினோம். ஆனால், இந்தக் குளத்துக்கு நிரந்தரமாகத் தண்ணீர் விட வேண்டும். அது அரசால் மட்டுமே முடியும். காவிரி கிளை ஆறான புது ஆற்றிலிருந்து குளத்துக்குத் தண்ணீர் வரும் நீர்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரிசெய்து ஆற்றில் தண்ணீர் வரும்போது குளத்துக்குத் தண்ணீர் வரவழைத்து நிரப்ப வேண்டும். இதன் மூலம் எங்கள் பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயரும். இனி இந்தக் குளத்தை எங்க கண் போல பராமரிப்போம். இதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை குளத்திலேயே கொண்டாடினோம் என்றனர் ஊர் மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,233.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.