Show all

இராணுவக் குவிப்பு- பீதியில் உறைந்திருக்கும் காஷ்மீர் மக்கள்! இந்த நிலையில் வெளியாகியுள்ள ஒரு செய்தி: சாதகமா? பாதகமா?

ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை ஒன்றியப் பகுதிகளாகவும்  பிரிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலை நாளில் மோடி இதனை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, ஐம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில்  குவிக்கப்பட்டுள்ளதுடன், தரை, வான் படைகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என அம்மாநில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என நடுவண் அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

காஷ்மீரின் சிறப்புத் தகுதியை ரத்து செய்ய கூடாது என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மாநிலத்தை மூன்றாக பிரிக்கும் முடிவை நடுவண் அரசு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நடவடிக்கைகளால், காஷ்மீர் மக்களிடையே அச்சம் நிலவும் நிலையில், வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் எனவும், அமைதி காக்குமாறும் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்டு அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடுவண் அரசு மூன்றாக பிரிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ள ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளில்: தனி மாநிலமாக பிரிக்க எண்ணியுள்ள ஜம்மு பகுதியில் ஹிந்து மதத்தினரும், ஒன்றியப் பகுதியாக பிரிக்க எண்ணியுள்ள காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், பெருபான்மையினராக உள்ளனர். மற்றொரு ஒன்றியப் பகுதியாக பிரிக்க எண்ணியுள்ள லடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். 

இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த இந்தியா காசுமீர் மாநிலத்தின் சில பகுதிகள் குறித்து பாகிஸ்தானுடன் காஷ்மீர் பிரச்சினை, சியாச்சின் பிணக்கு மற்றும் சீனாவுடன் அக்சாய் சின் பிணக்குகள் கொண்டுள்ளன. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைப் பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ‘இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்’ என்றே குறிப்பிடுகின்றனர். ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.

சம்மு காசுமீர் மாநிலத்தைப் புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் சம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான ஹிந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பௌத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் ‘குட்டி திபெத்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்திய மாநிலங்களில் காசுமீர் மாநிலத்தில் மட்டுமே இசுலாமியர் பெரும்பான்மையினராக உள்ளனர். மாநிலத்தில் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுவோர் சுமார் 67 விழுக்காட்டினர் ஆவார்கள். லடாக் நிலப்பகுதியில் பௌத்த சமயத்தைச் சார்ந்தோர் 46 விழுக்காட்டினர். இப்பகுதி மக்கள் இந்தோ-திபெத்திய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஜம்முவின் தெற்கு பகுதியில் உள்ளோர் பெரும்பாலும் இந்தியாவின் மற்றைய அண்டைய மாநிலங்களான ஹரியானா பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறியவர்கள்.

சம்மு காசுமீர் மாநிலத்தின் முதன்மை மொழிகள் : காஷ்மீரி மொழி உருது மொழி, தோக்ரி மொழி, பகாரி மொழி, பால்டி மொழி, லடாக் மொழி, பஞ்சாபி, கோஜ்ரி மொழி மற்றும் தாத்ரி மொழி ஆகியன ஆகும். பாரசீக-அரபி எழுத்துக்களால் எழுதப்படும் உருது மொழி மாநிலத்தின் அலுவல் மொழியாகும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டாவது மொழிகளாக உள்ளன.

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காசுமீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச அறங்கூற்றுமன்ற ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. சம்மு காசுமீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும். சம்மு காசுமீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.

ஜம்பு- காஷ்மீர் மாநிலத்திற்கு இவ்வளவு சிறப்புத் தகுதிகளையும் பெற்றுக் கொடுத்தவர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மாமன்னர் ஹரி சிங் ஆவார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர், தனது ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைக்காது, இறையாண்மை மிக்க நாடாக ஆள முடிவு செய்தார் மாமன்னர் ஹரி சிங்.
இவரது முடிவினை சாதமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம், ஜில்ஜிட்-பால்டிஸ்தானில் வாழும் பஷ்தூன் பழங்குடி மக்களுக்கு போர்க்கருவிகளை வழங்கி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளையும் மற்றும் ஜம்முவின் மேற்கு பகுதிகளில் முசாபராபாத் நகரத்தையும், அதனை ஒட்டிய பகுதிகளையும் கைப்பற்றச் செய்தனர்.

பாகிஸ்தானின் நடவடிக்கையைக் கண்டு அஞ்சிய ஜம்மு காஷ்மீர் மாமன்னர் ஹரி சிங், தனது ஜம்மு காஷ்மீர் நாட்டை இந்தியாவுடன் இணைக்க, தனது நாட்டிற்கு இத்தனை சிறப்புத் தகுதிகளும் வழங்கப் பட வேண்டும் என்று கேட்டு இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,233.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.