Show all

ஊரடங்கிற்கு மாற்றாக, கொரோனாவை எதிர்கொள்ள! ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்னெடுக்கும் சிறப்பான நடவடிக்கை

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், சென்னையில் தங்கள் தொழிற்சாலையை அமைத்துள்ளன. ஆனால் ஊரடங்கு சிக்கல்களால் சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஊரடங்கிற்கு மாற்றாக, ஒரு சிறப்பான நடவடிக்கைக்குக் களம் இறங்கியுள்ளன.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா முன்னெடுத்த, எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ஊரடங்கு நடவடிக்கையால், பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகம். இதில் சென்னையை சார்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் தலைமைத்துவமாக விளங்கி வருவது சென்னை. சென்னையைச் சுற்றிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், சென்னையில் தங்கள் தொழிற்சாலையை அமைத்துள்ளன. ஆனால் ஊரடங்கு சிக்கல்களால் சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு காரணமாக, ஒட்டு மொத்த மக்களின், பண புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் வாகனங்களின் விற்பனை சொல்லி கொள்ளும்படி பெரிதாக இல்லை. ஆனால் வரும் மாதங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய கொரோனா எதிரொலியால் வாகனங்களின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா பரவல் அச்சம் காரணமாக, பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவதை குறைத்து கொண்டுள்ள மக்கள், சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே வரும் மாதங்களில் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து, விற்பனை உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

அப்படி ஒரு சூழல் உருவானால், வாகனங்களை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய நிலை வரும். எனவே உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சென்னையில் இயங்கி வரும் வாகன நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளன. 

இந்தியாவில் இன்றைக்கு 102வது நாளாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த 101 நாட்களாக கல்யாண மண்டபங்கள், விடுதிகள், உலாப் போக்கிடங்கள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஒட்டி செயல்பட்டு வரும் திருமண மண்டபங்கள், விடுதிகள் ஆகியவற்றுக்குத் தற்போது தேவை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கல்லூரி கட்டிடங்கள் மற்றும் உலாப் போக்கிடங்களுக்கான தேவையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. 

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹ_ண்டாய், டிவிஎஸ், ரெனால்ட்-நிஸான், ராயல் என்பீல்டு ஆகியவைகள்தாம், அவற்றை வாடகைக்கு எடுத்து வருகின்றன. தங்கள் ஊழியர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்காக அந்நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. எவ்வித பாதிப்பும் இல்லாமல் உற்பத்தி தொடர்வதை உறுதி செய்வதற்காக, இந்த நடவடிக்கையை முன்னணி நிறுவனங்கள் எடுத்துள்ளன. 

இதில், ஹோண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், திருப்பெரும்புதூரில் உள்ள தனது தொழிற்சாலைக்கு அருகே, மூன்று கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. அவர்களின் வளாகத்தை பயன்படுத்தி கொள்வதற்காக, இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹோண்டாய் நிறுவனத்தின் இயக்குனர் (உற்பத்தி) கணேஷ் மணி இந்த தகவலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உற்பத்தி தொடர்வதை உறுதி செய்வதற்காக தொழிற்சாலைக்கு அருகே சுமார் 1,200 ஊழியர்களுக்கு இடவசதியை உருவாக்கியுள்ளோம் என்றார். 

ரெனால்ட்-நிஸான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பெரும்பாலும் உணவக விடுதிகளில் இடவசதி ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம், அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தனது ஊழியர்களுக்கு தேவையான இடவசதியை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பண புழக்கம் இல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால், வாகனங்களின் விற்பனை தற்போது மந்தமாகி இருக்கிறது. ஆனால் வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் போது, கிடைக்கும் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதால், உற்பத்தி தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றன. 

கொரோனாவை எதிர்கொள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கை கொரோனாவிற்கு எதிரான போதுமான பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கையாகும். இந்த முறை தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வில், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இது மிகவும் பாதுகாப்பான நடவடிக்கையாகும். முயற்சியில் வெல்லட்டும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.