எவ்வளவு கடுமையான ஊரடங்கிலும், தேவையான காய்கறி, பழங்களை வாங்க முடிந்தாலும் ஏதோ ஒரு சலிப்பு பொதுமக்களிடம் இருப்பதாச் சொல்லப்படுகிறது. 20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகங்கள், பள்ளி விளையாட்டுத் திடல்களில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவலர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல தள்ளு வண்டிகள் மூலமாகவும் பொது மக்களை தேடி காய்கறி-பழங்களை வணிகர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் தேவையான காய்கறி, பழங்களை வாங்க முடிந்தாலும் ஏதோ ஒரு சலிப்பு பொதுமக்களிடம் இருப்பதாச் சொல்லப்படுகிறது. எந்தப் பொருளாக இருந்தாலும் தரம் பார்த்து, சோதித்து, பேரம் பேசி வாங்குவதுதான் மக்களின் குறிப்பாக பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று. அதிலும் உணவுப் பொருட்களான காய்கறி-பழங்கள் என்றால் பெண்கள் கூடுதலாகவே விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள். மூட்டை மூட்டையாக காய்கறி குவிந்து கிடந்தாலும், தரமானவற்றை பொறுமையாக அலசி ஆராய்ந்து பொறுக்கி எடுப்பார்கள். தற்போது கொரோனா பீதி காரணமாக காய்கறி-பழங்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் பொதுமக்கள் கை படாதவாறு வணிகர்கள் கண்டிப்பு காட்டுகிறார்கள். ‘எத்தனை கிலோ வேண்டும்? என சொல்லுங்கள், எடுத்துப்போடுகிறேன், தயவுசெய்து காய்கறி மீது கைவைக்க வேண்டாம்’, என வெளிப்படையாகவே வணிகர்கள் சொல்லிவிடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதனால் வணிகர்கள் அளந்துபோடும் காய்கறிகளைத்தாம் வாங்கிக் கொண்டு வரவேண்டிய கட்டாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறி-பழங்கள் தேர்வு செய்யும்போது நல்லவற்றை பார்த்து பார்த்து தேர்வு செய்து பயன்படுத்துவோம். தற்போது அதற்கு அனுமதி இல்லை என்பதால், வணிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு காய்கறிகளை எங்களுக்கு கொடுக்கிறார்கள். இதில் பல நேரங்களில் அழுகிய, தரமற்ற காய்கறியும் வந்துவிடுகிறது. இதுகுறித்து கேட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என வணிகர்கள் கைவிரிக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி நல்ல பொருட்களை வாங்குவதாம், என்று சலிப்புடன் கூறுகிறார்கள். இது ஒருபக்கம் என்றால், ஒரு சிலர் காய்கறியை தொட்டு வாங்குவதால், பலர் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கவே யோசிக்கிறார்கள். ஏற்கனவே வணிகமில்லை என்ற சூழலில், தற்போது இந்தச் சிக்கலும் சேர்ந்து கொள்வதால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்களும் என்ன செய்ய? என்று வணிகர்கள் புலம்புகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



