Show all

முடங்கும் தொழில்களில் முதலிடத்தில் கறிக்கோழிமற்றும் முட்டைகள் வணிகம்! கறிக்கோழியால் கெரோனா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு அறிவிப்பு

கறிக்கோழி சாப்பிட்டால் கொரோனா பரவக்கூடும் என்கிற அச்ச மிகுதியால், தமிழக அளவில் கறிக்கோழி வணிகம் படுத்து விட்டது. கிலோ ரூ200க்கு விற்ற கறிக்கோழி ரூ100க்கு விற்கிறது. கறிக்கோழி சாப்பிட்டதால் கொரோனா வந்ததாக யாராவது நிரூபித்தால் ரூ ஒருகோடி பரிசாம்; கறிக்கோழி வணிகர்கள் அறைகூவல்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றால் ஒட்டுமொத்த உலகமும் தொழில் வணிக முடக்கம், பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகிறது. 

கறிக்கோழி சாப்பிட்டால் கொரோனா பரவக்கூடும் என்கிற அச்ச மிகுதியால், தமிழக அளவில் கறிக்கோழி வணிகம் படுத்து விட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடையே உள்ள அச்சம் அகலவில்லை. 

மக்கள் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களை அதிகம் விரும்பி உண்கிறார்கள். தற்போது கறிக்கோழி கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அவர்களது வணிகம் பாதித்துள்ளதாக கவலை கொண்டுள்ளனர். மேலும் கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு ரூ 200-லிருந்து ரூ 100- ஆக குறைத்துக் கொண்டுள்ளனர். எனினும் மக்கள் பெரும்பாலானோர் கறிக்கோழியை நாடவில்லை. 

இதையடுத்து மீன் ஆட்டுக்கறி உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்துவிட்டது. ஆனால் கோழி, முட்டையின் விலை சரிந்துவிட்டது. இந்த நிலையில் கறிக்கோழி சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோழி கடைக்காரர்கள் முயற்சித்து வருகிறார்கள். 

கறி விலைக் குறைப்பு, கறிக்கோழி65 விலை குறைப்பு ஆகிய யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த விலை குறைப்பெல்லாம் குடிமகன்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. 

இதையடுத்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர் சம்மேளனத் தலைவர் ஒரு அதிரடி சிறப்புவாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் கோழிக் கறி, முட்டை சாப்பிட்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசளிக்கிறோம். கொரோனா தொற்று பீதியால் விற்பனையாகாமல் நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேங்கியுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டதால் 4 கோடி முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. மேலும் கிலோ 90-க்கு விற்பட்ட கறிக்கோழி விலை தற்போது ரூ 50-ஆக குறைந்துவிட்டது. இப்படியே போனால் நாங்கள் எப்படி பிழைப்பது என அச்சத்தைப் பதிவு செய்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.