12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை போரூரில் உள்ள சிறிராமசந்திரா பல்நோக்கு மருத்துவமனை அருகே தனியார் கார் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதி முழுக்க முழுக்க போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதால் இந்த விபத்து காரணமாக மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தத் தீ விபத்து காரணமாக சுமார் 700-800 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இந்தத் தீ போரூர் பகுதி முழுக்க பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் தீ பற்றி எரிந்துள்ளன. ஆனால் இது எப்படி எரிந்தது என்பதற்கான முழு விவரங்கள் தெரியவில்லை. 200 கார்கள் அங்கு இதுவரை எரிந்து சாம்பலாகி உள்ளன. இன்னும் நிறைய கார்கள் எரிந்து கொண்டு இருக்கின்றன. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த கார்கள் எல்லாம் நிஸான் நிறுவனத்தை சேர்ந்த ஒரே வகை கார்கள் ஆகும். முன்னாள் ஏர்செல் புரோமோட்டரான தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்த கார்கள் இவை என்று கூறப்படுகிறது. யூடு கால் டாக்சி என்ற கால் டாக்சி நிறுவனத்தை தொடங்குவதற்காக வாங்கப்பட்ட கார்கள் இவை என்றும் தெரிவிக்கிறார்கள். அங்கு தற்போது தீ வேகமாக பரவி வருவதால் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,073.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



