12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை என்று இணையச் சேவை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மிக விரைவில் வரவிருக்கிற ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகப் பெருகும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் செல்பேசி பயனாளர்கள் தற்போது நான்காவது தலைமுறை இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை குறித்து தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலர் எஸ்.கே. குப்தா: இந்தியாவில் தற்போது 40 கோடி மக்களுக்கு தரமான இணையதள சேவை கிடைக்கிறது என்றும். இந்தியாவில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை தொலைத் தொடர்புத்துறையில் பின்பற்றப்படும் என்று தெரிவித்தார். ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை நடைமுறைக்கு வந்தால் நான்காவது தலைமுறை இணையச் சேவையைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை மக்களின் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் என்றும் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு நொடியில் 1-ஜிபி தரவு பதிவிறக்க வேகம், இடைநிற்றல் இல்லாமல் காணொளி காணும் வசதி, துல்லியமான காட்சிகள், ஒலிகள் ஆகியவை ஐந்தாவது தலைமுறை இணையச் சேவையின் சிறப்பம்சங்களாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. இதற்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்தவும் நடுவண் அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை அமெரிக்காவிலும் தென்கொரியாவிலும் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை சந்தையை கைப்பற்ற ஐடியா வோடாபோன் முயன்று வருகிறது; நடுவில் ஆட்சி மாறாமல் ஜியோவை எந்தக் கொம்பனாலும் வெல்ல முடியாது என்கிற அச்சத்தோடே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,073.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



