Show all

பொங்கல் பரிசாக கன்னத்தில் அறைந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவில், கட்சி மாவட்டப் பேராளரைக் கன்னத்தில் அறைந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்து, தொகுதி முழுவதும் ஒட்டியுள்ள சுவரொட்டியால், அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

     கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில், கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அப்போது, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஊத்தங்கரை, அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம், தன் கணவர் நாகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, கட்சி மாவட்டப் பேராளியும், தர்மபுரி நடுவக் கூட்டுறவு வங்கி இயக்குனருமான மலையாண்டள்ளியை சேர்ந்த சக்திவேலை, பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார். இதனால், கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. சக்திவேலை, கட்சியினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சட்டமன்ற உறுப்பினர் தன்னை அறைந்ததற்கு நன்றி தெரிவித்து, மத்தூர், கெரிகேபள்ளி, சாமல்பட்டி, குள்ளனூர், காரப்பட்டி மற்றும் ஊத்தங்கரை தொகுதி முழுவதும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில்,      “கிருஷ்ணகிரி தொகுதியில் இருந்து வந்திருந்தாலும், இரண்டாவது முறையாக ஊத்தங்கரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கழக நிர்வாகிக்கு, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், பொங்கல் பரிசாக, கன்னத்தில் பளார் வழங்கிய, சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி” என, குறிப்பிடப்பட்டுள்ளது.

     தொகுதி முழுவதும் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால், பொதுமக்களிடையே மட்டுமின்றி, கட்சி தொண்டர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள், சுவரொட்டிகளை நேற்று காலை முதல் கிழித்தபடி இருந்தனர். இதுகுறித்து சக்திவேல் கூறுகையில்

தனக்கும், இந்த சுவரொட்டிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தனக்கே தெரியாமல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.