Show all

அரசியல்! துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியவில்லை

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் புறக்கணித்தாகத் தெரிகிறது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் டெல்லி சென்றிருந்தனர்.

பன்னீர் செல்வத்தின், திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. அரசில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, பதவிகள் கிடைக்கவில்லை என்றெல்லாம், பேசப்பட்ட நிலையில், பன்னீர் செல்வம் திடீரென டெல்லி சென்றதால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதை மறுத்து மதியம் 2 மணியளவில் நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம், தனிப்பட்ட முறையில் நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பேச டெல்லி வந்துள்ளதாகவும், இது அரசு முறை பயணம் இல்லை என்றும் கூறினார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரரை மதுரையில் இருந்து சென்னைக்கு ராணுவ உலங்கு வானூர்தியில் அழைத்து செல்ல உதவியதற்காக நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்க வந்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக ஏன் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுடன் அவர் டெல்லி சென்றார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

ஓ.பன்னீர்செல்வம், வெளிப்படையாக பேட்டியளித்த பிறகாவது, அவரை சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அதையும் நிர்மலா சீதாராமன் அலுவலகம் செய்யவில்லை. எனவே யாரையுமே சந்திக்காமல் பன்னீர் செல்வம் மதியமே டெல்லி விமான நிலையம் சென்றுவிட்டார். மைத்ரேயனை மட்டும் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.

பன்னீர் செல்வத்தின், சகோதரர் உடல் நலத்திற்காக உலங்கு வானூர்தி கொடுத்து உதவிய நிர்மலா சீதாராமன், இன்று சந்திப்புக்கு கொஞ்ச நேரம் கூட ஒதுக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசு முறை பயணமாக போகவில்லை என்றாலும், துணை முதல்வர் என்ற பதவியில் உள்ள பன்னீர் செல்வத்தை மைத்ரேயனை சந்தித்தபோதே நிர்மலா சீதாராமன் சந்தித்திருக்கலாமே என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,858.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.