26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் சொட்டு மருந்து போட வேண்டும். போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் மலத்தின் வழியாக பரவும் ஒருவகை தொற்றுநோய். இதனால் தசைநார் பலவீனம் அடைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த நோயை குணப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இருப்பினும் அதனை வராமல் தடுக்கலாம். அதற்காக 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டதன் மூலம், இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து, தடுப்பு மருந்து போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் அளிக்க வேண்டும். இதற்காக தொடக்க சுகாதார நிலையங்கள், மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், தொடர்வண்டி மற்றும் பேருந்து நிலையங்களில், பொருட்காட்சி உள்ளிட்ட இடங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மறக்காமல் சொட்டு மருந்து போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.