30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பெண்களிடம் இருந்து தாலி மற்றும் தங்கச் சங்கலி பறிப்புகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் விபத்துகளிலும் சிக்குகின்றனர். ஆண்களிடம் இருந்தும் விலை உயர்ந்த பொருட்கள் பறிக்கப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் பத்துக்கு மேற்பட்டோரிடம் தங்கச்சங்கலி மற்றும் செல்பேசிகள் பறிக்கப்பட்டுள்ளன. புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், அயனாவரம், சிந்தாதிரிப்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். திருவொற்றியூர், சாத்தான் காட்டு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் பதிவான கண்காணிப்பு படக்கருவி காட்சி காவல்துறைக்கு கை கொடுத்தது. பார்த்திபன், மணி ஆகிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே வேப்பேரி பகுதியில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்களும் சிக்கினர். சித்தார்த் என்ற வாலிபர் தலைமையில் அப்பகுதியில் கூட்டாக இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிட்லப்பாக்கத்தில் விக்னேஷ் என்ற வாலிபர் பிடிபட்டார். மாங்காட்டிலும் 2 வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர். மேலும் 30 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தொடரும் தங்கச் சங்கலி பறிப்பு மற்றும் செல்பேசி திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். சாலையில் நடந்து செல்லுவதற்கே அச்சமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதிகாலை நேரங்களில் இந்த வகை திருட்டுகள் அதிகம் நடப்பதால், அதிகாலை நேரங்களில், வாசல்முறை செய்வோரும், நடைபயிற்சி மேற்கொள்வோரும் நகைகள், செல்பேசி தவிர்ப்புகளால் வழிப்பறி கொள்ளைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என்று விழிப்புணர்வு ஊட்டுகின்றனர் காவல்துறையினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,817.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



