30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது ஆளும் பாஜக அரசு. தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் குளறுபடி, மீத்தேன், கெயில் எரிவாயு, நியுட்ரினோ, தற்போது பசுமைவழிச் சாலை, எப்போதும் பெட்ரோல் விலை அதிகப்படியான உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என பல பிரச்சனைகளை மோடி அரசால் மக்கள் சந்தித்து வரும் நிலையில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, உடல்வலி சவால் குறித்து கீச்சுவில் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார். நடுவண் விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்தோர் தொடங்கிய இந்த உடல்வலி சவால் விளையாட்டு, மோடி வரை சென்று தற்போது நோய்தொற்று போல் பிரபலங்கள் நடுவே பரவி வருகிறது. உங்களின் உடலை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதை காணொளியாக வெளியிட்டு கீச்சுவில் உங்கள் உடல்வலி சவாலை பதிவு செய்ய வேண்டும். இதுதான் இந்த விளையாட்டின் முதன்மை நோக்கம். அண்மையில் கோலி இந்த போட்டிக்கு மோடியை அழைத்து இருந்தார். அவரும் தனது கீச்சுப் பக்கத்தில் சவாலை ஏற்பதாகவும் விரைவில் காணொளியை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், எப்போதுமே மோடி அரசை விமர்சிப்பத்தில் முன்னோடியாக விளங்கி வரும் கேரள அரசும், கேரள மக்களும் இந்தச் சவாலையும் விட்டு வைக்கவில்லை. பெட்ரோல் விலை உயர்வு, உடல்வலி சவால் இரண்டையும் கண்டிக்கும் விதத்தில், மோடிக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பெட்ரோல் பங்குகளுக்கு சென்று கேரள மக்கள் நூதனமாக போராட்டம் நடத்தியுள்ளனர். பெட்ரோல் பங்கில், அங்குள்ள தரையில் படுத்துக் கொண்டு தண்டால் எடுப்பது போன்ற போராட்டங்களைச் செய்து அசத்தியுள்ளனர். இதற்கு மக்கள் பலரும் சமூகதளங்களில் தங்களின் ஆதரவு விரல் நுனி தேய்த்துக் கொள்கின்றனர். நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி விடுத்த உடல்வலி சவாலை ஏற்றுக்கொண்டு தனது உடற்பயிற்சி குறித்த காணொளி ஒன்றை இன்று காலை வெளியிட்டார். யோகா மற்றும் நடைப்பயிற்சியை அன்றாடம் மேற்கொண்டு வரும் மோடி இந்தக் காணொளியில் அதன் செய்முறையை பதிவு செய்துள்ளார். அன்றாடம் உடற்பயிற்சி எடுப்பதனால் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காணொளி வெளியீட்டை தொடர்ந்து, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்ற கதையாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சீண்டி உடல்வலி குறித்த சவாலை ஏற்கும்படி சவால் விடுத்தார். இந்தச் சவாலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதிலடியாக, 'என்னை உடல்வலி சவாலுக்குத் தேர்ந்தெடுத்ததற்கும் எனது உடல்நலம் மீது அக்கரைக் கொண்டதற்கும் நன்றி. உடற்பயிற்சி அனைவருக்கும் தலையாயத்துவமானதுதான். யோகா மற்றும் டிரெட்மில் பயிற்சியையும் நான் அன்றாடம் செய்து வருகிறேன். ஆனாலும் எனது உடல் நலத்தை விட இந்த நாட்டின் ஆரோக்கியத்திலேயே முதல் அக்கரைக் காட்ட விரும்புகிறேன். அதற்கு தங்களின் உதவியும் தேவை.' என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். மோடிக்கு குமாரசாமி அளித்துள்ள பதிலுக்கு இணைய ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,817.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



