29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தள பகுதியில் கருவூல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று ஊழியர் ஒருவர் சில ஆவணங்களை எடுப்பதற்காக நிலைப்பேழையைத் திறந்த போது, ஆவணங்களின் மேல் குட்டி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள ஆவணங்களிலும் குட்டி பாம்புகள் நெளிந்து சென்றன. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் சத்தம் போட்டு ஓடினார். இதைக்கண்டு மற்ற ஊழியர்களும் அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே ஓடினர். இதுகுறித்து உடனடியாக கரூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆவணங்களுக்கு மத்தியில் ஊர்ந்து கொண்டிருந்த 3 கட்டுவிரியன் வகையை சேர்ந்த குட்டி பாம்புகளை லாவகமாக பிடித்து பையில் போட்டு எடுத்து சென்றனர். அதற்குப் பிறகுதான் கரூவூல அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். மேலும் தற்போது குட்டி பாம்புகள் மட்டுமே பிடிபட்டுள்ளதால், தாய் பாம்பு நிச்சயம் அந்த பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் கரூவூல ஊழியர்கள் பீதியில்தான் பணியாற்றுகின்றனர். பாம்புகள் சாலையோரங்களில் சுவரை ஒட்டியே செல்லும். மற்றும் செடி, புதர் மண்டிக் கிடக்கும் இடங்களிலேயே செல்லும். அதன் உணவான எலிகள் அங்கே இருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் பாம்புகளின் மறைவிடங்கள் இருக்கும். தொழிற் கூடம், என்றால் குப்பைகள் மற்றும் பழைய சாமான் இருக்கும் இடங்கள், வீட்டிற்குள் புகும் பொழுது நிலைபேழை போன்று மறைவாக இருக்கும் இடத்திலேயே சென்று தங்கும். வீட்டிலோ, அலுவலகத்திலோ சுற்றுப் புறத்தை எலிகள் தங்காமல் தூய்மையாக வைத்துக் கொண்டால் பாம்பைப் பற்றிய அச்சம் தேவையில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,816.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



