ஒற்றை வரியில் சொல்வதென்றால், தமிழினத்துக்கு உலக முகவரி கொடுத்தவன் இராசராச சோழன். ஏன்கிறார் இராசராச சோழன் குறித்து கவிஞர் வைரமுத்து. 18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராசராச சோழனின் ரசிகன் நான். தமிழினத்துக்கு உலக முகவரி கொடுத்தவன் இராசராச சோழன். தமிழ் நிலத்துக்கு வெளியே தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தவன் இராசராச சோழன். அவன் காலத்தோடு அவனைப் புரிந்துகொள்வதுதான் இராசராச சோழனுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை. அது போர்ச் சமூகம், நிலவுடமைச் சமூகம், அது மன்னராட்சி முறையில் வளர்ந்த சமூகம். அந்தச் சமூகத்தின் பின்னணியில்தான் நாம் இராசராசனைப் புரிந்துகொள்ள வேண்டும். இராசராச சோழனை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத சில விசயங்கள் இருக்கத்தான் செய்யும். இடங்கை, வலங்கை என்ற பிரிவுகள் வந்தது இராசராச சோழன் காலத்தில்தான் என நானே எழுதியிருக்கிறேன். சம்ஸ்கிருதத்துக்கு முதன்மைத்துவம் வந்ததுகூட இராசராச சோழன் காலத்தில்தான். ஆனால், சமயத்தில் தமிழையும் தமிழில் சமயத்தையும் இரண்டு கண்களாகக்கொண்டு வளர்த்தவன் இராசராச சோழன். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு விளக்கு ஏற்ற வருகிறார்கள் மக்கள். அவர்களிடம் இராசராசன், ‘விளக்கு ஏற்ற வேண்டுமென்றால் நெய் வேண்டும். அந்த நெய்யை நீங்கள் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக 100, 200 என ஆடுகளைக் கொடுங்கள். உங்கள் விளக்கு எரியும்’ என்கிறார். ஆடுகள் கொடுக்கப்பட்டன. இராசராசன் அந்த ஆடுகளை திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதியிலுள்ள உழவர்களுக்கு மேய்ச்சலுக்குக் கொடுக்கிறார். அதன்மூலம் வரும் பலனை அவர்களையே அனுபவித்துக்கொள்ளச் சொல்கிறார். ‘விளக்கு எரிவதற்கு மட்டும் நெய் கொடுத்துவிடு’ என உழவர்களிடம் சொல்லிவிடுகிறார். கோயிலில் விளக்கும் எரிந்தது, ஏழைகள் வீட்டில் அடுப்பும் எரிந்தது. இறைவனைப் பயன்படுத்தி மக்களைச் சந்தித்தவன் இராசராசன். இந்தப் பெருமைகளை எல்லாம் நாம் மறந்துவிடலாமா. சின்னச்சின்ன சிறுமைகள் யார் காலத்தில்தான் இல்லை? குறைகளை நாம் நிகழ்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது பெருங்குறையாகத்தான் தெரியும். காலத்தின் கண்கொண்டு பார்க்க வேண்டும். இராசராசன் என்கிற மாமன்னனை நாங்கள் கொண்டாடுகிறோம்; போற்றுகிறோம். ஏன்கிறார் இராசராச சோழன் குறித்து கவிஞர் வைரமுத்து! தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தை தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்கூறும் விதத்தில் அமைந்துள்ளார் இராசராச சோழன் அவர்கள். அதாவது கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 சிவநடுகல்லின் உயரம் 12 அடி. தமிழ் உயிரெழுத்துக்கள் 12 சிவநடுகல்லின் பீடம் 18 அடி. தமிழ் மெய் எழுத்துக்கள் 18 சிவநடுகல்லுக்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள். என்று கூறி தமிழ் அறிஞர் பெருமக்கள் இராசராச சோழனைக் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,202.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



