Show all

நேற்று, 12வது வகுப்புத் தேர்வின் முதல்நாளில்! 1,761 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 11 மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை

12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. 11 மாணவர்கள் 5 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை தடை விதிப்பு. இந்த சோக நிகழ்வுகளின் அடிப்படையை காரணமறிந்து அரசு களைய முற்படவேண்டும்.

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: 12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. சேலம் மாவட்டத்தில் 17,030 மாணவர்களும், 20,258 மாணவிகளும் என மொத்தம் 37,288 பேர், நடப்பாண்டு 12வது வகுப்பு தேர்வினை எழுதுகின்றனர். இவர்களுக்கென மாவட்டம் முழுவதும் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

12ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களுக்கான இரண்டு தாள் நடைமுறை நீக்கப்பட்டு, ஒரே தாளாக நடந்த முதல் தேர்வு இதுவாகும். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நேற்று நடந்த தமிழ் தேர்விற்கு 820 மாணவர்கள், 941 மாணவிகள் என மொத்தம் 1,761 பேர் வரவில்லை. 

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட 11 மாணவர்கள் 5 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாணவர்களின் தேர்வை கண்காணிக்க ஆசிரியர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்படிருந்தனர். மேலும் தேர்வுகளின் போது, காப்பியடித்தல் மற்றும் வேறு ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை செய்யப்படுவார்கள் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழ் முதல்தாள் தேர்வில் காப்பி அடித்தல் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலை தேர்வுத்துறை வெளியிட்டது. அதில், பழைய பாடத்திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் வேலூரில் தேர்வு எழுதிய 11 தனித்தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்டதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 11 தனித்தேர்வர்களும் பொதுத்தேர்வு எழுத தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சோக நிகழ்வுகளின் அடிப்படையை காரணமறிந்து அரசு களைய முற்படவேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.