Show all

தலைப்பாகியுள்ளது! குறைந்த விலைக்கான குடுவைக் குடிநீரின் மீதான நடவடிக்கைகளால், தூய்மைக் குடிநீரின் தேவைக்கான தட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை. உலகெங்கும் மாசுவால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவிவரும் நிலையில், மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்த விலைக்கான தூய்மைப்படுத்தப்பட்ட குடுவைக் குடிநீரின் மீதான நடவடிக்கைகளால்- மக்களுக்கு கிடைத்துவரும் தூய்மையாக்கப்பட்ட நீரின் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படுத்துவது- தேவைதானா என்ற கருத்து- மக்கள் தளத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி முத்திரையிட உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிமம் இல்லாமல் செயல்பட்ட குடிநீர் ஆலைகளை மூடி வருகிறார்கள். 

இந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளை பூட்டியுள்ளனர். இதனால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல் பரிதவித்து வருவதாக செய்தி வெளியாகிறது.

அறங்கூற்றுமன்ற உத்தரவை அறங்கூற்றுவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குடிநீர் ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக குடுவைக் குடிநீர்க் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மண்டல செயலாளர் ஈஸ்வர், மாநில ஆலோசகர் சதாசிவம் ஆகியோர் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 40 குடிநீர் ஆலைகள் உள்ளன. இதில், 8 ஆலைகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளன. இதனால் மீதமுள்ள 32 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இத்தொழிலில் சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக மருத்துவமனைகள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு குடுவைக் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த அறங்கூற்றுமன்றமும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போதைய குடிநீர் ஆலைகள் மூடல் என்கிற- அரசு அதிகாரிகளின் நடவடிக்கையில், தப்பியிருப்பது வெறுமனே இருபது விழுக்காடு நிறுவனங்களே என்கிற நிலையில், மற்ற எண்பது விழுக்காட்டு நிறுவனங்களின் அனுமதியின்மைக்கு குடிநீர் ஆலைகளே காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்பதை சமூக ஆர்வலர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் துறை சார்ந்த ஆலை முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பில்லாத வகையான நடைமுறையை அரசு முன்னெடுத்து குடுவைக் குடிநீரின் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும்.

தமிழகத்தின் பெரும்பாலான சிறிய சாலையோரக்கடைகளில்கூட குறைந்த விலைக்காரணம் பற்றி குடுவைக் குடிநீரின் பயன்பாடு மிகுந்து வருகிறது. நம்பிக்கையாக நம்மால் அந்த உணவகங்களை பயன்படுத்த இது வாய்ப்பாக அமைகிறது. இந்த நிலையில்; தூய்மைப்படுத்தப்பட்ட குடுவைக் குடிநீரின் மீதான நடவடிக்கைகளால்- மக்களுக்கு கிடைத்துவரும் தூய்மையாக்கப்பட்ட நீரின் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படுத்துவது விவாதப் பொருளாகியிருக்கிறது.

உலகெங்கும் மாசுவால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவிவரும் நிலையில், மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்த விலைக்கான தூய்மைப்படுத்தப்பட்ட குடுவைக் குடிநீரின் மீதான நடவடிக்கைகளால்- மக்களுக்கு கிடைத்துவரும் தூய்மையாக்கப்பட்ட நீரின் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படுத்துவது- தேவைதானா என்ற கருத்து- மக்கள் தளத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.