அறந்தாங்கியில் மர்ம நபர்களால் பெரியார் உடைக்கப் பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவ மனை அருகே இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சிலையை திராவிடகழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமலில் உள்ள காரணத்தால் பெரியாரின் சிலையும் துணியால் மூடப்பட்டிருந்தது. இதனிடையே பெரியார் பொதுவான தலைவர் என்பதால் அவரது சிலை மீது மூடப்பட்டிருந்த துணியை அகற்றலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் அனுமதி அளித்திருந்தார். அதன்படி துணியால் மூடப்பட்டிருந்த பெரியார் சிலையை மூன்று நாட்களுக்கு முன்பு கட்சி நிருவாகிகள் அகற்றியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பெரியார் சிலையின் தலைப்பாகம் மர்ம நபர்களால்உடைக்கப்பட்டு கீழே கிடந்துள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அருகில் குடியிருப்போர்கள் மற்றும் தெருவாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடைந்த பெரியார் சிலையை மூடி வைக்க காவல்துறையினர் முயன்ற போது திகவினர்- குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் வரை சிலை திறந்தே இருக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து சிலையை மூடும் நடவடிக்கையை கைவிட்டனர் காவல் துறையினர். தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைப்பு நம்முள் பலவகையான கேள்விகளை எழுப்பி நிற்கிறது. இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தமிழகம் பெரியாரை கொண்டாடிதான் வந்திருக்கிறது. பெரியார் சிலை உடைப்புக்கு காரணம் என்ன வந்தது தற்போது? தமிழர் தன்மான உணர்வுக்கு விதை போட்டு தமிழர் தன்மானம் தழைக்கச் செய்தவர் பெரியார். அவர் சிலை உடைக்கப் படுகின்றது என்றால் இனி தமிழர் தன்மானத்தின் மீதும் ஆதிக்கம் பரவுமா? தமிழர் இனி தன்மானத்தோடு வாழ முடியாதா? அச்சமாக இருக்கிறது! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,116.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.