Show all

பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் சிக்கல் வருமா!

பத்தாம் வகுப்பு தேர்வு இரத்தால், பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் சிக்கல் வருமா? இது சிலரின் கேள்வி. சின்னதா ஒரு தேர்வு வைக்கலாமே. 11ம் வகுப்பில் பாடப்பிரிவு தேர்வுக்கு இது சிலரின் எதிர்பார்ப்பு. ஆனால் கொரோனாவோ நமது தவறைத் திருத்திக் கொள்ளாமல் தீர்வுகள் சாத்தியமில்லை என்பது போல் இயங்குகிறது.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொஞ்சம்கூட இடம் கொடுக்காமல், அடித்துத் தூக்கி வரும் கொரோனாவால் அதிர்ந்து போய் எடுக்கப்பட்ட முடிவுதாம், பத்தாம் வகுப்புக்குத் தேர்வே வேண்டாம் என்கிற மிகச்சிறப்பான முடிவு. 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ள நடவடிக்கை, அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டாலும், பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் பாடப்பிரிவு தேர்வு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாகவும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்தி தீர்வு காணலாம் எனவும் சிலர் கருதுவதும் அதை அங்கலாய்த்து ஏராளமான மாய்மாலங்களைக் கட்டுமானம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு, அதற்காக முழங்குவதும்:- எப்படியாவது இந்த மக்களைக் கொரோனாவிடம் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதாகச் சிந்திப்பது போல இருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக மிகவும் அரிதாகப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில், மக்களாக எத்தனை பெரிய போராட்டம் நடத்தியும் இந்த அருமை பெருமையை நமக்குப் பெற்றுத் தந்திருக்க முடியாது. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருக்கிறது. பள்ளி காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப் பதிவேட்டைப் பொறுத்து 20 மதிப்பெண்களையும் கொண்டு மதிப்பெண் வரையறுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவு, பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை, பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தன்னுடைய கருத்துகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில காலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. சுனாமி, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போதுகூட இது நடந்ததில்லை. கொரோனா என்பது, இது எல்லாவற்றையும்விட ஒரு கூடுதலான அறைகூவல். ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு அறைகூவல் வந்திருக்கிறது. அந்த நூற்றாண்டின் தன்மைக்கு ஏற்பவும் வசதிக்கு ஏற்பவும் அதை மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். இன்று தொழில்நுட்பம், மருத்துவ வசதி எவ்வளவோ வளர்ந்திருந்தாலும், அதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில்தான் கொரோனா நுண்ணுயிரி உள்ளது.

அம்மை வருவதுகூட ஒரு நுண்ணுயிரியால்தான். அம்மை வந்த குழந்தையை மடியில் வைத்துக்கொள்ள முடியும். அந்தக் குழந்தைக்கு மஞ்சள், வேப்பிலை அரைத்துப் போட முடியும். சுடுதண்ணீர் ஊற்றி வடுக்களை உதிர வைக்க முடியும். பள்ளிக்கு அந்தக் குழந்தையை அழைத்துச் செல்ல முடியும். தனியாக உட்கார வைத்து தேர்வு எழுத வைக்க முடியும். 

ஆனால், ஒரு குழந்தைக்கு கொரோனா வந்தால், அந்தக் குழந்தையைத் தாய் பார்க்க முடியாது. தாய்க்கு வந்தால், குழந்தை பார்க்க முடியாது. ஓர் அசாதாரண சூழலில் அசாதாரண முடிவு எடுக்க வேண்டியது கட்டாயம்தானே.

முதலில் மக்களாட்சி மாண்புக்கு உட்பட்ட ஒரு முடிவாக இதைப் பார்க்கிறேன். தெலங்கானா முதல்வர் கூறியதையெல்லாம் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஓர் அறிக்கை கொடுத்திருந்தார். அறிக்கையில் தொற்றின் வீரியம் மாறிக்கொண்டிருப்பதையும் குறிப்பிட்டிருந்தார். வழக்கமாக குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு இதில் நல்ல முடிவை எடுங்கள் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணியினரும் கோரிக்கை விடுத்தனர். அதேபோல கூட்டணிக் கட்சியான பாமகவும் ஓர் அறிக்கை கொடுத்தது. அறங்கூற்றுமன்றமும் ஒரு வேண்டுகோளாக அரசுக்கு கோரிக்கை வைத்தது.

உயிருக்குக்கூட உத்தரவாதம் கொடுக்க முடியாத சூழலில் தேர்வை ஒத்தி வைப்பதை ஏன் பரிசீலிக்கக்கூடாது என்றுதான் அறங்கூற்றுமன்றம் கேட்டது. தேர்வை மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பவில்லை. ஆசிரியர்களும் விரும்பவில்லை. இன்று எல்லோருடைய வேண்டுகோளையும் ஏற்று, ஆலோசித்து அரசு முடிவு எடுத்துள்ளது. ஓர் அசாதாரணமான சூழலில் அசாதரணமான முடிவு என்பதால், அதை எடுக்க வேண்டிய சூழல் கனிந்து வர வேண்டுமல்லவா? அது நேற்று கனிந்துவந்தது. அதன் அடிப்படையில் அரசு முடிவெடுத்ததாக நான் பார்க்கிறேன்.

மதிப்பெண்ணை வைத்து மாணவன் தேர்ச்சி என்பதே வடிகட்டும் நடைமுறைதான். என்னிடம் 40 இடங்கள்தான் உள்ளன. ஆனால், 400 விண்ணப்பங்கள் வருகின்றன என்றால், 360 விண்ணப்பங்களை வடிகட்டத்தான் மதிப்பெண்ணே தவிர, ஒரு மாணவனின் தகுதி, திறமை, ஆர்வத்தைத் தீர்மானிக்க அல்ல. பதினொன்றாம் வகுப்பில் சேர அடிப்படைத் தகுதி, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துவிட்டது. இப்போது பதினொன்றாம் வகுப்பில் சேரும்போது மாணவனின் ஆர்வத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். மாணவன் எதிர்காலத்தில் எந்தத் துறையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான், அந்த ஆர்வம் அவனிடம் இருக்கிறதா என்று மதிப்பிடுங்கள்.

அந்த மாணவன் பத்தாம் வகுப்பை அதே பள்ளியில் படித்திருந்தால், அந்த மாணவனுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதிலும் போட்டி வருகிறது என்றால், பள்ளிக்கு மிக அருகே உள்ள மாணவனுக்கு முன்னுரிமை கொடுங்கள். மாணவனின் சமூக பின்தங்கல், பொருளாதார நலிவுற்றல் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள். அப்படி சமூக பின்தங்கல், பொருளாதார சூழலிலிருந்து வரும் மாணவன் ஆர்வமுடன் படித்தால், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நன்மை பயக்கும். இந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும் என்றால், கொரோனா காலத்திலும் பணியாற்றும் அரசு ஊழியர்களாக அவர்களை உருவாக்குகிறீர்கள் என்றுதாம் பொருள்

அப்படி இல்லையென்றால், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் விடுப்பு கொடுத்துவிட்டுச் சென்றார்கள் அல்லவா? தகுதி வாய்ந்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் சேர்த்தால், விடுப்பு கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அப்போது யாரிடம் சென்று சிகிச்சை எடுத்துகொள்ள முடியும்? அன்று அறங்கூற்றுமன்றம் இந்தச் சம்பளத்துக்கு வேலை பார்க்க முடியவில்லையென்றால், வேறு வேலைக்குச் சென்றுவிடுங்கள் என்று செவிலியர்களிடம் எளிமையாக சொல்லியிருந்தது. அதுபோல செவிலியர்கள் சென்றிருந்தால், இன்று யார் செவிலியர் பணியைச் செய்திருக்க முடியும்? இதுபோன்ற சூழலில் எந்த அடிப்படையில் மதிப்பெண்ணை வைத்து பதினொன்றாம் வகுப்பில் இடம் என்று கூற முடியும்?

பதினொன்றாம் வகுப்பு, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் என எது படித்தாலும், அதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது அடிப்படை. மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். எனவே மாணவர் விரும்பும் துறை எது, அதில் அவருடைய ஆர்வம் ஆகியவற்றோடு மேற்சொன்ன சில அம்சங்களைக் கொண்டு பதினொன்றாம் வகுப்பு, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் சேர்க்கலாம். அரசின் வேலைவாய்ப்புக்குக்கூட பத்தாம் வகுப்புதான் தகுதி. அந்த வேலைவாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் போட்டித் தேர்வு எழுதிதானே சேர முடியும். பத்தாம் வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவருக்கு அந்த வேலை கிடைக்கப்போகிறதா?, இல்லையே! எனவே எந்த வகையிலும் மாணவர்களின் கல்வித் தரத்தையோ எதிர்காலத்தையே அரசின் இந்த முடிவு பாதிக்காது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்! இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.