Show all

கொரோனா எடுத்துக் கொண்டுவிட்ட முதல் அரசியல்வாதி! முதுமை பாராட்டாமல் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கினார்

கொரோனா எடுத்துக் கொண்டுவிட்ட முதல் அரசியல்வாதி! முதல் சட்டமன்ற உறுப்பினர். அதுவும் இந்தியாவிலேயே முதலாவது! என்பதோடு தனது பிறந்த நாளிலேயே காலமானார் அன்பழகன். முதுமை பாராட்டாமல் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கியதால்.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  கொரோனா தடுப்பு பணிகளை இந்த அளவுக்கு இழுத்து போட்டு செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே அவர் உடம்பு சரியில்லாமல் இருந்தவர். முதன்முதலில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று டாக்டர் ரேலா ஸ்டாலினிடம் சொன்னபோதே கடுமையான அதிர்ச்சியானார் ஸ்டாலின்.

ஜெகத்ரட்சகனிடம், “நான் ஏற்கெனவே அன்புகிட்ட சொன்னேன். உடம்பை பார்த்துக்கோன்னு. அவன் கவனிக்கவே இல்லை. எப்படியாவது என் அன்புவை மீட்டு கொண்டு வந்துவிடுங்கள். என் ரொம்ப நாள் நண்பன்” என்று முதல் நாளிலேயே உருக்கமாக சொன்னார் ஸ்டாலின். 

அன்பழகன் எப்படியாவது பிழைத்து கொண்டு வந்துவிட மாட்டாரா என்று ஏங்கி கொண்டே இருந்தார். தமிழக முதல்வரும் அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தபடியே இருந்திருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கே வந்துவிட்டார். தமிழிசை சவுந்தராஜனோ ஐதராபாத்தில் இருந்து மருந்து அனுப்பினார். இப்படி கட்சிகளையும் தாண்டி அனைவரையும் ஈர்த்தவர் ஜெ.அன்பழகன். கண்ணெதிரே சிரித்தபடியே சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்தவர் இப்படி கொரோனாவால் அழைத்துக் கொள்ளப்பட்டதைத் தமிழ்நாடு எதிர்பார்க்கவில்லை. ஆம்! ஜெ. அன்பழகன் காலமானார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார். அவருக்கு அகவை 62. உடல்நலக் குறைவு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கடந்த கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருந்தது சோதனை மூலம் கண்டறியப்பட்டது.

மேலும், அவருக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகரித்ததன் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியவில்லை.
மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுநீரகத்தில் சிறிய சிக்கலும், கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன் மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டது.

ஜெ.அன்பழகனுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்த காரணத்தால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு உயிர்வளி அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாததால் நிலைமை கவலைக்கிடமானது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து ரேலா மருத்துவமனை நிர்வாகம் முந்தாநாள் மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டு அதில் அன்பழகனின் உடல்நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.

இதனிடையே மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜெ.அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ.அன்பழகன் மறைவுச்செய்தியை அறிந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை முன் சென்னை மேற்கு மாவட்ட திமுகவினர் குவியத் தொடங்கினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.