Show all

கோயில்கள் நம்முடையன- கொண்டாடுங்கள் தமிழர்களே!

பல்லாயிரக்கணக்கான பழைமை வாய்ந்த தமிழகக் கோயில்களை, நமது உடைமையாக கருதி துய்மை மட்டும் பேணி, பழைமை மாறாமல் பாதுகாக்க முயலாமல், பக்தி அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என்று கூறி, பெரும்பாலான இடங்களில் தடுப்பு கட்டி, கமுக்க இடங்களாக மாறுவதற்கு வாய்ப்பு அளித்து, சிலைத் திருட்டுக்கு சோரம் போகிறோம். கோயில்கள் நம்முடைய உடைமைகள். பழைமை மாறாமல் பாதுகாத்து கொண்டாடுவோம்.

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஒரு கோயிலில் இருந்த திருமங்கையாழ்வாரின் உலோகச் சிலை ஒன்று, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. அதை மீட்பதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கிராமம் அங்கு அமைந்திருக்கும் சுந்தரப்பெருமாள் கோயிலால் அந்தக் கிராமம்  இருக்கிறது சுந்தரப்பெருமாள் கோயில் கிராமம் என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை மாற்றப்பட்டு, பழமையான சிலை லண்டனில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டிருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

சுந்தரப்பெருமாள் கோயிலில் தற்போது திருமங்கை ஆழ்வாரின் உலோகச் சிலை ஒன்று உள்ளது. ஆனால், அது பழமையான உலோகச் சிலை இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோயிலில் இருந்த திருமங்கை ஆழ்வாரின் சிலையின் பழைய புகைப்படத்தையும் தற்போது உள்ள சிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது வேறுபாடு தெரிந்தது. பிறகு ஆராய்ந்ததில், ஏற்கனவே இருந்த சிலை மாற்றப்பட்டு தற்போது உள்ள சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை அதிகாரியான அன்பு.

இது 54 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்திருக்க வேண்டும். காரணம், 54 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் சிலை புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் உள்ள சிலையும் தற்போதுள்ள சிலையும் ஒன்றுதான். அதேபோல, 64 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட சிலையின் புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதுள்ள சிலை வேறு மாதிரியாக உள்ளது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் உள்ள சிலையும் லண்டன் அருங்காட்சியத்தில் உள்ள சிலையும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆகவே, 64லிருந்து 54 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் சிலை மாற்றப்பட்டிருக்கலாம் என்று மேலும் அன்பு தெரிவித்தார் .

ப்ரென்ச் இன்ஸ்ட்டிடியூட் ஆப் புதுச்சேரியில் உள்ள பழைய ஆவணங்களில் இருந்த புகைப்படங்கள் திருமங்கையாழ்வாரின் பழைய சிலையை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தற்போது இந்தச் சிலை, ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் கீழ்த் திசை கலைகளுக்கான பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அருங்காட்சியகம் தன்னுடைய இணைய தளத்தில் இந்த சிலை பற்றி அளித்திருக்கும் குறிப்பில், வெண்கலத்தில் செய்யப்பட்ட இந்தச் சிலை 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கூறியுள்ளது. கையில் கத்தியும் கேடயமும் கொண்டிருக்கும் திருமங்கையாழ்வாரின் இந்தத் திருவுருவம், தமிழ்தொடர்ஆண்டு-5067ல் (ஆங்கிலம்1967) வாங்கப்பட்டதாகவும் அருங்காட்சியகத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. இந்தச் சிலை 57.5 சென்டி மீட்டர் உயரம் கொண்டது.

தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியத் தூதரகத்தின் மூலம் சிலையை மீட்பதற்கான பணிகள் தொடங்கப்படுமென சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

‘இந்த சிலை யாரால் அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டதென தெரியவில்லை. அருங்காட்சியகத்திடம் அந்தத் தகவல் இருக்கும். அதனைப் பெற்று, பின்னோக்கி வந்தால் எப்படி சிலை மாற்றப்பட்டதெனத் தெரியவரும்’ என்கிறார் அன்பு.

ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்திலிருந்து கிடைக்கும் சாதகமான பதில், தமிழகத்திலும் காரைக்காலிலும் நடந்த பழைய சிலை திருட்டுகள் மீது புதிய நடவடிக்கைகளைத் முன்னெடுக்க மிகப் பெரிய தொடக்கமாக இருக்கும். இப்படி திருடப்பட்ட 25க்கும் மேற்பட்ட வெண்கலச் சிலைகள் குறித்த பட்டியலை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள காவல்துறைக்குத் தந்திருக்கிறோம்’ என்கிறார் வெளிநாடுகளில் உள்ள இந்திய சிலைகளை மீட்பதில் ஆர்வம் காட்டிவரும் இந்தியப் பெருமை திட்டத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும் சிலைத்திருடன் என்கிற ஆங்கில நூலின் ஆசிரியருமான விஜயகுமார். இந்த திருமங்கையாழ்வார் சிலை, 2360 டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்கிறார் விஜயகுமார்.

தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் சுமார் 315 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 100 வழக்குகள் அறங்கூற்றுமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மேலும் 100 வழக்குகளில் துப்புதுலக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 115 வழக்குகள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன.

இந்தக் கைவிடப்பட்ட வழக்குகளில் புதிதாக துப்பு கிடைக்கும்போது மீண்டும் இந்த வழக்குகள் புதுப்பிக்கப்பட்டு, விசாரணையை தீவிரப்படுத்துவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவிக்கிறது.

கோயில்கள் நம்முடைய உடைமைகள். அவைகள் வெறுமனே பக்தி நோக்கத்திற்காக மட்டும் கட்டப்படவில்லை. பக்தி நோக்கத்திற்காக மட்டுமாக கட்டப்பட்டவை குலதெய்வ கோயில்கள் மட்டுமே. தமிழக கோயில்கள்- மக்களுக்கான பொது இல்லம், வேலைவாய்ப்பு, கலைவளர்ச்சி, நீர் மேலாண்மை, பொருளாதாரம் இப்படி பல்வேறு நோக்கங்களுக்காக தமிழகம் முழுவதும் ஆட்சியில் இருந்த அனைத்து மன்னர்களாலும் பெரிதாகவும், சிறப்பாகவும், குளங்களோடும், மூலிகைத் தோட்டங்களோடும், கட்டப்பட்டன. 

கோயில்களை மீண்டும் அதே பழைய நோக்கத்திற்காக பயன்படுத்த- தேவையில்லாத தடுப்புகள், புதிய கட்டுமாணம், விளக்குகளை ஏற்றி கோயில்களை எண்ணெய்யாலும், கரியாலும் குளிப்பாட்டுதல் அகியவற்றை தவிர்த்து ஒவ்வொரு தமிழனும் தத்தம் பகுதிகளில் உள்ள கோயில்களை பாதுகாக்க முனைவோம். கூட்டத்தை கட்டுப்பாடக இருந்து கட்டுப்படுத்த கற்றுக்கொள்வோம். நமது திருமணங்களில் எத்தனை கூட்டம் வந்தாலும் கட்டுப்படுத்த தடுப்புகளா அமைக்கிறோம்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.