Show all

கீச்சுவில் தலைப்பானது- உலகம் முழுவதும் பேசுபொருளானது! நமது வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய குடியுரிமை திருத்தசட்ட எதிர்ப்பு போராட்டம்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், காவல்துறையினரின் அடாவடியால்- திருப்பூர், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவி அங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், காவல்துறையினரின் அடாவடியால்- திருப்பூர், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவி அங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டம் இரவு வரை தொடர்ந்த நிலையில், அவர்களை கலைந்துபோகும்படி காவல்துறையினர் வலியுறுத்தினர். இருந்தபோதும் அவர்கள் கலைந்துபோகாத நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர், கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் அதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 120க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த செய்தி பரவியதும் சென்னையில் ஆலந்தூர், கிண்டி, அண்ணா சாலை, அண்ணா நகர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர். காவல்துறையினருடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இப்படியான சூழலில் நேற்று நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வண்ணம் மீண்டும் போராட்டம் வண்ணாரப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தி, நேற்றைய இரவை கறுப்பு இரவாக்கிய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் கீச்சுவில் தலைப்பாகி வரும் நிலையில்,  உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.