Show all

இன்றைய தலைப்பாகி வருகிறது! தமிழ் மொழிக்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் மாற்றம்: தமிழக அரசு ஆணை இரத்து

தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமது கீச்சுப் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவை இந்தேயம்-Indeyam என்று மாற்றக் கோருவதா! ஆண்டி பிடிக்கப் போய் அரசனாகிவிட்ட சொலவடை போல ஆயிரத்துப் பதினெட்டு ஊர்களின் பெயர் மாற்றம் செய்யப் போய் இந்தியாவின் பெயரையே மாற்றச் சொல்லுவதா என்று, வேண்டாமப்பா வம்பு என்று- தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைப்பது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றதாக பாவாணர் ஆய்வைப் போற்றும் தமிழ்ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.

தமிழ் வளர்ச்சி துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா கே. பாண்டியராஜன், ‘தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றம் செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கென 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ஊர்களின் ஆங்கில எழுத்துக்கூட்டல் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருட்டினகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டுள்ளன என்று தமிழக அரசு, கடந்த கிழமை அரசாணை வெளியிட்டது.

குறிப்பாக, கோயம்புத்தூரின் ஆங்கில எழுத்துக் கூட்டல் Coimbatore ஆக இருந்தது, தற்போது Koyampuththoor  என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், Tuticorin என்று குறிப்பிடப்பட்டு வந்த தூத்துக்குடி, Thooththukkudi என மாற்றப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை ஆங்கிலேயர்கள் உச்சரிக்க முடியாததால் அவர்களுக்கு ஏற்ப ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டனர். அவ்வாறு உச்சரிக்கப்படும் ஊர் பெயர்களை தமிழ் ஒலிப்புக்கு ஏற்ப மாற்றும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதுமே தாய்மொழி உச்சரிப்பின் அடிப்படையில் பெயர் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும்- முதலில் நாவலந்தேயம் என்ற பெயரில்தான் ஆங்கிலேயர் ஒலிக்கமுடியாமல் ந்தேயா-India என்று மாற்றி ஒலித்தனர். இந்தியாவை வடஇந்தியர்கள் யாரும் இந்தியா என்று எழுதுவதில்லை ஆங்கிலத்திலும், உலக மொழிகளிலும், தமிழிலும் மட்டுந்தாம் இந்தியா என்று எழுதப்படுகிறது. 

இந்தியாவை ஹிந்தியில் பாரதம் என்றே எழுதும் போது தமிழில் நாவலந்தேயம் பெயரடியாக இந்தேயம் என்றே எழுதலாமே அதேசமயம் தமிழகத்தில் ஆங்கிலத்தில் எழுதும் போது Indeyam   என்று எழுதலாமே என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

ஒரு பெயர் அல்லது ஊரின் பெயரை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனை களையும் வகையில் தரநிலைக்கட்டுப்பாடுகளை பயன்படுத்தி தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் அதனை எழுத வேண்டும். இது போன்ற பெயர் மாற்றங்களின் போது தொடக்கத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுவது இயல்புதான். எடுத்துக்காட்டாக மெட்ராஸ் மாநகரம், ‘சென்னை’ என பெயர் மாற்றப்பட்ட போது பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது சென்னை என்ற பெயர்தான் பரிச்சயமாக உள்ளது. இதேபோல் தற்போது மாற்றம் செய்யப்பட்ட ஊர்களின் பெயர்களும் காலப்போக்கில் பரிச்சயமாகிவிடும் என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

தமிழ் மொழியின் அடிப்படையில் பெயர் மாற்றும் நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டாலும் வரவேற்கத்தக்கது என்கிறார் எழுத்தாளர் பாமரன்.

தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்களின் ஆங்கிலப் பெயர்களில் திருத்தம் செய்வது கட்டாயமானது. எந்த சூழலில் இதை செய்தாலும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், சமஸ்கிருதம் போன்ற பிறமொழி கலப்புகளையும் ஆராய்ந்து தமிழ் ஊர்ப் பெயர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருவரங்கம், திருபெரும்புதூர் ஆகிய ஊர்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர் என எழுதப்படுகின்றன. இதுபோன்று, தமிழ் பொருள் பொதிந்த பல ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘பன்னீர்மடை’ என்ற ஊர் பன்னிமடை என்றும், ‘பூளைமேடு’ என்ற பகுதி பீளமேடு என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் திருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமது கீச்சுப் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது. புதிய அரசாணையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.