மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் துளியும் இல்லாத, அதிகாரப்பாட்டு ஊரடங்கின் 38வது நாளில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஊரடங்கு வாழ்க்கை, நம் கவலையை அதிகமாக்கியிருக்கிறது. மாமியார் முடியைப் பிடிங்கி மருமகள் வணிகம் செய்த கதைதான் நடுவண் பாஜக அரசின் செயல்பாடு. 18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னையில் கொரோனா பரவலை அடுத்த 10 நாட்களுக்குள் தடுத்திட வேண்டும் என்று மண்டல வாரியாக அமைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் எதிர் பார்க்காத அளவுக்கு, கொரோனா நுண்ணுயிரியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது அங்கு மொத்தமாக 906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக நலங்குத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை நாளைக்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகள் தயாராக வைத்திருக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவை தமிழக அரசு இதன் மூலம் நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த சட்டம் மூலம் பள்ளிகள், தனியார் நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த இடங்களில் மக்களை தங்க வைக்க அனுமதிக்கலாம். அவசர காலத்தில் இந்த இடங்களை அரசு பயன்படுத்த இந்தச் சட்டம் வழி வகுக்கிறது. தற்போது அதே சட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்து, சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக இந்த பள்ளிகள், அதன் வளாகங்கள் தேவைப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்ததுள்ளது. சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை நாளைக்குள் (மே2)ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த சுற்றறிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால்; ஊரடங்கின் 40வது நாளில் சென்னையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை. தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



