தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, தமிழகப் பெற்றோர்கள் பரபரப்பாகியுள்ளார்கள். பிஞ்சு குழந்தைகளை பிரிகேஜி என்றும் எல்கேஜி என்றும் யுகேஜி என்றும் கட்டிப் போடுவது நெருடலான விசயம்! அதற்கு ஏதாவது அரசு தீர்வுகாண முயல வேண்டும். 20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, தமிழகப் பெற்றோர்கள் பரபரப்பாகியுள்ளார்கள். குறிப்பாக பிரிகேஜி வகுப்பு குழந்தைகளை தயார் படுத்துவது பெற்றோர்களுக்கு பெரும் பாடாக இருக்கிறது. நேற்றுவரை கடுமையான வெய்யிலுக்கு மேல்சட்டையில்லாமல், எதிர் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்குமாக அலைந்து திரிந்து கொண்டும், தொலைக்காட்சியில் கானாப் பாடல்கள் வரும் போது துள்ளிக் குதித்து நடனமாடிக் கொண்டும், அப்பாவைப் போல் வேட்டி அம்மாவைப் போல் சேலை கட்டி பாவணைகளில் குதுகலமாக ஈடு பட்டு வந்த பிள்ளைகளை, சரியான நேரத்திற்கு குளிக்க வைத்து, சரியான நேரத்தில் சாப்பிட வைத்து, ஒப்பனைகள் செய்து பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் படாதபாடு படவேண்டியிருக்கும் இன்றைக்கு. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன. அரசுப் பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை செய்துள்ளது. புதிய பாடத்திட்டங்களை கற்பிப்பதற்கு குறைந்தது 210 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டியுள்ளதால் திட்டமிட்டப்படி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் ஒன்னரை மாத விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தங்களது பிள்ளைகளுக்கு எழுதுபொருட்கள், பேக், டிபன் பாக்ஸ், காலணிகள் வாங்க பெற்றோர் கடைகளுக்கு படையெடுத்தனர். அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள புதிய அனுமதிச்சீட்டு வழங்கப்படும் வரை பழைய அனுமதிச்சீட்டை மாணவர்கள் பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து பயணித்தாலே பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,172.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.