Show all

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன! எட்டு மாதங்களுக்குப் பிறகு

எட்டு மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இறுதியாண்டு வகுப்புக்கள் மட்டும் தொடக்கப் படுகின்றன. 

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக என்று நாடு முழுவதும் எட்டு மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக 8 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை. 

கொரோனா தாக்கம் குறைய குறைய பல்வேறு தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டன. அந்த அடிப்படையில் இன்று முதல் இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள், வேளாண், கால்நடை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு வகுப்புகள் இன்று திறக்கப்படுகின்றன. 

இறுதியாண்டு தவிர பிற மாணவர்களுக்கு தொடர்ந்து இணைய வழியே வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகளும் இன்று முதல் செயல்படுகின்றன. அதேநேரம் இந்த ஆண்டு மருத்துவகல்லூரிகளில் சேர்ந்துள்ளவர்களுக்கான வகுப்புகள் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்தே தொடங்கப்பட உள்ளன. கல்லூரி விடுதிகளும் இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முடிந்தவரை அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கிழமையில் ஆறு நாட்கள் கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரிகள், விடுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை தூய்மை செய்தல் போன்ற கொரோனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரிகளில் உடல் வெப்பநிலை சோதனை உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் உள்ள கல்லூரிகள், விடுதிகள் இன்று திறக்கப்படவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.