சேலம் மாநகரில் கடந்த வெள்ளிக் கிழமை ஒரேநாளில் 35 போக்கிரிகள் கைது செய்யப்பட்டனர். பிடிபடாமல் வம்படி செய்த போக்கிரி கதிர்வேல் சுட்டுக் கொலை! 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சேலம் மாநகரில், மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் போக்கிரிகளின் ஆளுமை அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் அட்டகாசத்தை தடுக்கவும், பொதுமக்கள் நடுவே நிலவும் அச்சத்தை போக்கும் வகையிலும் மாநகர காவல் ஆணையர் சங்கர் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்தநிலையில், சேலம் மாநகரில் கடந்த வெள்ளிக் கிழமை ஒரேநாளில் 35 போக்கிரிகள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய கதிர்வேல் என்ற போக்கிரியை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் காரிபட்டியில் கதிர்வேல் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறை தனிப்படையினர் போக்கிரி கதிர்வேலைச் சுற்றி வளைத்தனர். அப்போது கதிர்வேல் காவல்துறையினரை தாக்க முற்பட்டான். இரு தரப்புக்கும் நடைபெற்ற மோதலில் காவல்துறையினர் வேறு வழியின்றி கதிர்வேலை சுட்டுக்கொலை செய்தனர். ஒரு போக்கிரி ஒழிந்தான் ; மகிழ்ச்சி! தொடர்ந்து போக்கிரிகளை உருவாக்கும் நிறுவனமான டாஸ்மாக்கை ஒழிப்பது எப்போது? இது சேலம் மாநகர மக்கள் மட்டுமல்ல- ஒட்டு மொத்த தமிழக மக்களின் கேள்வி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,140.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



