தமிழகத்தில் உள்ள முதன்மைக் கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும்! இதை, நம்ம சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் எடப்பாடி- பன்னீர் ஆட்சி பொறுப்பில் இருக்கும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதலாகவே, கோடை வெயிலை தாங்க முடியாமலும், குடிக்க தண்ணீர் இன்றியும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கான தீர்வாக அந்த காலத்தில் தமிழர்கள் கோயில் கட்டியிருந்தனர். தமிழ் மன்னர்கள் கட்டிய பிரம்மாண்ட கோயில்களுக்கும், உலகினர் கட்டிய வழிபாட்டிடங்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. உலகினர் வழிபாட்டிடங்களின் நோக்கம் முழுக்க முழுக்க வழிபாடு மட்டுமே. தமிழ் மன்னர்கள் கட்டிய பிரம்மாண்ட கோயில்களுக்கான நோக்கம் வேறு. தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்களில் ஆழமான குளம் இருக்கும். மேடான கட்டிடம், பரவலான பாதுகாப்பான இடம் இருக்கும். அதிகமான மழையையும், அதிகமான வறட்சியையும் சந்தித்த தமிழர்களின் தீர்வுக்கான சிந்தனைதான் கோயில்கள். ஆறு ஓடும் பகுதிகளில் அணையைக் கட்டிய தமிழன் மற்ற பகுதிகளில் கோயிலைக் கட்டினான். ஊருக்குள் புகுந்து விட்ட நீரிலிருந்து பாதுகாப்புக்காக மேடான கட்டிடம், பரவலான பாதுகாப்பான இடம் கோயிலில் அமைப்பது அதிக மழையை எதிர் கொள்ளும் காலத்திற்கான தீர்வு. வறட்சிகாலத்தில் நிலத்தடி நீருக்கான தீர்வு அதே கோயிலில் குளம். அடுத்த கட்ட நடவடிக்கையாக தற்போது நாம் அறிவார்ந்த பழந்தமிழர்களின் தோன்றல்களாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும். நீர்ப்பெருக்கு காலத்துப் பாதுகாப்பாக தனி மனிதர்களே கூட உயரமான கட்டிடங்களைக் கட்டிக் கொள்கின்றனர். வறட்சி காலத்திற்கு, குளத்திற்கு என்ன வழி? இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதலாகவே, கோடை வெயிலை தாங்க முடியாமலும், குடிக்க தண்ணீர் இன்றியும் பொதுமக்கள் பட்டுவரும் பெரும் சிரமத்திற்கு என்ன வழி? விடை: குளம்! குளத்தை யார் கட்டுவது? அரசுதானே கட்ட வேண்டும்? மன்னர் காலத்தில் நீர் நிலைகளுக்காக ஒதுக்கப் பட்டிருந்த சதுப்பு நிலத்தில் கூட ஆட்சியாளர்கள் மனைகளைப் போட்டு விற்பனை அல்லவா செய்து விட்டார்கள். ஆற்றையும் சீரழிக்க மணலைத் திருடி அல்லவா விற்கிறார்கள். அன்றைய தமிழர் ஆட்சி- மன்னர் ஆட்சியாம். தற்போது நடப்பது- மக்களாட்சியாம். என்னே கொடுமை! வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல- பார்பனியர் கைகளில் இருக்கிற அறநிலையத் துறை: முதன்மைக் திருக்கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்தக் கோரி, உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்: நல்ல பருவ மழை பெய்து நாடு செழிக்க முதன்மைத் திருக்கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1. பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல் 2. அருள்மிகு நந்திப் பெருமானுக்கு நீர்த் தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல் 3. சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல் 4. மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல் 5. ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல் 6. வருண காயத்ரி மந்திர பாராயனம் செய்தல் மேற்கூறியவாறு அந்தந்த திருக்கோவில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட அக்கறையுடன் இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களை (பார்ப்பனியர்கள்) தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட சார்நிலை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்து சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,140.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



