சென்னையைச் சேர்ந்த செல்வராணி, இயங்கலையில் இரவுஉடை (நைட்டி) வாங்க 599 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், அவரிடமிருந்து நூதன முறையில் 60,000 ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. 18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலையில் உங்களை ஏமாற்ற வரிசை கட்டி காத்திருக்கின்றனர் பலர். இயங்கலையில் பொருட்கள் வாங்கும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி என்று கற்றுத் தேறியவர்கள் மட்டுந்தாம் பாதுகாப்பாக பொருட்கள் வாங்க முடியும். நிறைய பேர்கள் இணையம் குறித்த கொஞ்சமான அறிவோடு ஏதாவது செய்யப்போய் பணத்தை இழப்பது இயல்பாக நடந்து விடுகிறது. இழப்பிற்குப் பிறகு யோசித்துப் பார்த்தால் அடடே இதையெல்லாம் செய்யாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றும். உங்கள் செல்பேசியில் தெளிவாக கற்றுக்கொள்ளாத எதிலும் உள்நுழைய முயலாதீர்கள். ஒவ்வொருவரும் எந்தெந்த வகையாக மாட்டுவார்கள் என்ற தரவுகளோடு பலர் இணையத்தில் இதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றார்கள். 599 ரூபாய்க்கு பொருள் வாங்க இணையத்திற்குள் நுழைந்து, பொருளும் வாங்காமல் 60000 ரூபாயை இழந்த அனுபவத்தை இங்கே பார்ப்போம். சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி அகவை 32. இவர் சில நாட்களுக்கு முன் இயங்கலை செயலி மூலம் 599 ரூபாய் மதிப்புள்ள இரவுஉடை ஒன்றுக்கு கேட்பு அனுப்பியுள்ளார். அதற்கான பணத்தை தன்னுடைய கணவரின் ஆதாய அட்டை மூலம் இயங்கலையிலேயே செலுத்தியுள்ளார். சீன செயலிகளுக்கு நடுவண் அரசு தடை விதித்த காரணம்பற்றி செல்வராணிக்கு இரவுஉடை கிடைக்கப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அவர், பொருளுக்கான கேட்பை இரத்து செய்துள்ளார். அப்போது உங்கள் பணம் திரும்ப செலுத்தப்படும் என எந்தவித சேதியும் செல்வராணிக்கு வரவில்லை. இதையடுத்து அவர் தொடர்புடைய செயலியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை இணையதளத்தில் தேடி எடுத்து அந்த எண்ணுக்கு விவரத்தைக் கூறியுள்ளார். எதிர்முனையில் பேசியவர், உங்களின் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்றால் ஆதாய அட்டைய புகைப்படம் எடுத்து புலனம் வழியாக அனுப்பும்படி தெரிவித்துள்ளார். உடனடியாக செல்வராணியும் அனுப்பியுள்ளார். அடுத்து கூகுள் விளையாட்டுக் கடைக்குச் சென்று ஒரு செயலியை தரவிறக்கம் செய்யும்படி கூறியவுடன் அதையும் செல்வராணி செய்துள்ளார். இந்தச் சமயத்தில் வங்கியிலிருந்து செல்வராணியின் கணவரின் செல்பேசிக்கு ஒரு சேதி வந்திருக்கிறது. அதில் 60,000 ரூபாய் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து செல்வராணியும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மீண்டும் செல்வராணி தான்பேசியிருந்த எண்ணுக்கே பேசி 60,000 ரூபாய் பிடித்தம் செய்த விவரத்தைக் கூறியுள்ளார். அப்போது வாடிக்கையாளர் (மோசடி) சேவையிலிருந்து பேசிய நபர், மீண்டும் செயலியைத் தரவிறக்கும் செய்யக் கூறியுள்ளார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த செல்வராணி, பேசியிலேயே வாக்குவாதம் செய்துள்ளார். உடனடியாக அந்த மோசடி நபர் இணைப்பைத் துண்டித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து சுழியம் குற்றப்பிரிவு காவலர் கூறுகையில், ஊரடங்கு காலகட்டத்தில் இணையதள வழி குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதனால் பொதுமக்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். வங்கி ஆதாய அட்டை விவரங்களை யாருடனும் தெரிவிக்க வேண்டாம் எனப் பலதடவைக் கூறியும் மோசடி கும்பலுக்கு சாதகமாக ஏமாறுபவர்கள் நடந்துகொள்கின்றனர். தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி மூலம் இந்த மோசடியை அந்தக் கும்பல் செய்துள்ளது. இணையதளத்தில் வாடிக்கையாளர் சேவை எண்கள் என்று மோசடி கும்பல்கள் தங்களுடைய எண்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். அதனால் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்குத் தொடர்பு கொள்வதற்கு முன் அது தொடர்புடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்தானா என்று உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து நடவடிக்கை எடுக்க முயல்வதாக கூறி அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பிறகே செல்வராணி ஏமாந்ததை உணர்ந்துள்ளார். பின்னர் இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றார். செல்வராணியிடம் விசாரித்த காவலர், நீங்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் சுழியம் குற்றப் பிரிவில் புகாரளிக்கும்படி கூறியுள்ளனர். அதனால் செல்வராணி, சென்னை நடுவண் குற்றப்பிரிவு சுழியம் குற்றப் பிரிவுக்குச் சென்று புகாரளித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



