தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு இன்று மிகச்சிறப்பாக நடந்தது. தமிழில் குடமுழுக்கு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டன. சல்லிக்கட்டைத் தொடர்ந்து, மற்றுமொரு பகுதியான வெற்றி- இன்று இந்த தமிழில் குடமுழுக்கு. இந்நன்னாளில் அனைத்துக் கோயில்களிலும் தமிழை முழுமையாக முன்னெடுக்க ஒவ்வொரு தமிழனும் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். 22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு இன்று மிகச்சிறப்பாக நடந்தது. குடமுழுக்கு நடைமுறைகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டன. பல மாவட்டங்களில் இருந்து குடமுழுக்கு விழாவை காண மக்கள் வருகை புரிந்துள்ளனர் காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடந்தது. தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள், மந்திரங்கள் ஓதப்பட்டன. கோபுரத்தில் தமிழ் மந்திரம் ஒலிக்க ஓம் நமச்சிவாய முழக்கம் விண்ணை முட்டியது. தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு, சம்ஸ்கிருத மந்திரங்களும் கூறப்பட்டது. தேவாரம், திருவாசகத்தை கேட்க நிறைய இடங்களில் சிறப்பு ஒலிப்பெருக்கி ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின் சரியாக 9:21 மணிக்கு அரச கோபுரத்தின் உச்சியில் நன்னீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் குடமுழுக்கு நடக்கிறது. இதனால் இந்த விழா அதிக முதன்மைத்துவம் பெறுகிறது. காலை 10 மணிக்கு விளக்கேற்று பூசை நடந்தது. பெருவுடையார் விமானமான தஞ்சை பெரிய கோபுரத்திற்கும் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இதை பல லட்சம் மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். இந்த விழாவில் இது மிகவும் முதன்மையான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன. இதில் ஒரு கோபுரம் அரச கோபுரம் ஆகும். மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு சிறப்புப்பூசை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு ஐந்தெய்வங்கள் திருவீதி உலா நடைபெற்றது. தமிழர்களின் கட்டடக் கலைத்திறனுக்குச் சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெரியகோயில், ஆயிரத்து பத்து ஆண்டுகளைக் கடந்து, நம் கண் முன்னே நிற்கும் மிகஉயரக் கோயில் கட்டுமானத்தைப் பற்றி வரலாற்று வல்லுநர்கள் வியக்கின்றனர். இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலம், சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முதன்மையாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்டது. 1010 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், இன்றைக்கும் பெரிய கோவிலை உலகமே அன்னாந்து பார்த்து வியக்கின்றது. 23 ஆண்டுகள் கழித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலுக்கு குடமுழுக்கு என்ற உடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரிய கோவிலில் பெருமையை தேடி தேடி படிக்கின்றனர். தஞ்சாவூருக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிகின்றனர். இராசராசன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்து அதை கைப்பற்றிய பின்னர் தான், அங்குள்ள சிவன் கோயில்களை பார்த்து வியந்து போய் நாமும் ஏன், இதே போல் ஒரு சிவன் கோயிலை மிகச்சிறப்பாக எழுப்பக்கூடாது என்று தன்னுடைய மனதில் கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலாக தோன்றியதே தஞ்சை பெருவுடையார் கோயில். பல்லவ மன்னனான இராச சிம்மனால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிலாதநாதர் கோயிலின் கட்டமைப்பும், சிற்ப வேலைப்பாடுகளும் இராசராச சோழனின் மனதை பெரிதும் கவர்ந்தன. இதுவே இப்படி ஒரு கோயில் கட்டுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. மருத்துவர்களால் குணமாக்க முடியாத நோயால் பீடிக்கப்பட்ட இராசராசசோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை என இந்நாளில் அழைக்கப்படும் தலை மன்னார் காடு உறை ஈசனை வணங்கச் சென்றார். அப்போது மன்னரின் ஆசிரியர் கருவூராரும் உடன் இருக்க, தன் சோழமண்டலத்தில் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்தனர். மன்னர் தன் நாடு மீண்டு மனைவி லோகமாதேவியோடு திருவாரூர் சிவனைத் தொழுது நாடி கேட்டனர். அப்பொழுது படிக்கப்பட்ட ஓலைச்சுவடியில், தஞ்சை, உறையூர், காஞ்சி என்ற மூன்று தலைநகர்களில் தஞ்சையில் காவிரிக்கரையில் கோயில் கட்டவும், இதற்கான கற்கள் திருச்சி மலைப் பகுதியிலிருந்து எடுக்கவும் ஆணை வந்தது. நோய் நீக்கும் சிவன் மூலவருக்கு நர்மதை ஆற்றங்கரையில் இருந்து கற்களை கொண்டு வந்து கோயிலை அமைத்தான் இராசராசசோழன். பெரிய கோவில் கல்வெட்டில் இக்கோயிலை உருவாக்கியவர், வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன். இவருடைய பணிக்கு உதவியாக மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்பவர்களும் குஞ்சரமல்லனுக்கு துணையாக கோயில் திருப்பணிகளைச் செய்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராச ராச சோழனுக்கு- பொன்னியின் செல்வன், அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருண்மொழி, அழகிய சோழன், இரவிகுல மாணிக்கம், இரவி வம்ச சிகாமணி, அரச கண்டியன், அரச சர்வக்ஞன், இராசாச்ரையன், இராசகேசரி வர்மன், இராச மார்த்தாண்டன், இராசவிநோதன், இராசேந்திர சிம்மன், உத்தமச் சோழன், உத்துங்கதுங்கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கீர்த்தி பராக்கிரமன், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுயங்கன், சிங்களாந்தகன், சிவபாத சேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், சோழ நாராயணன், சோழேந்திர சிம்மன், திருமுறை கண்ட சோழன், தெலிங்க குலகாலன், தைலகுலகாலன், நிகரிலிச் சோழன், நித்திய வினோதன், பண்டிதச் சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்ரமாபரணன், சனநாதன், செயங்கொண்ட சோழன் எனும் பல்வேறு பெயர்களால் சிறப்பிக்கப் பட்டதைக் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். ஆயிரத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உடையலூரில் இராசராசன் மறைந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. அந்த இடத்தில் சிவநடுகல் ஒன்று உள்ளது. அதிலிருந்து சுமார் 80 அடி தொலைவில் இரண்டு சிவநடுகல்கள் உள்ளன. இன்றைக்கு அது கவனிப்பாரற்று சிதிலடைமடைந்துள்ளது என்பதுதான் சோகமான உண்மை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



