26,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தொடக்க காலத் திமுக, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைக்கான கட்சி என்று உலகளவில் கொண்டாடப் பட்டதுண்டு. காரணம் மக்கள் நலத் திட்டங்களை தேடித் தேடி கண்டுபிடித்து சாதனை நிகழ்த்திய இந்தியாவின் ஒரே கட்சி திமுக. ஒன்றிய ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் திமுகவைக் கண்டு நடுங்கும். குடிசை மாற்று வாரியம் என்று தமிழகமெங்கும் ஏழை எளிய மக்களுக்கு அடுக்கு மாடி வீடு கட்டித் தந்த இந்தியாவின் ஒரே கட்சி திமுக என்றும் கொண்டாடப்பட்ட காலம் திமுகவின் தொடக்க காலம். இட ஒதுக்கீடு, தமிழகத்தில் இல்லை ஹிந்தி மொழிக் கல்வி, பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம், தொழுநோய் இல்லம், கண்ணொளி வழங்குந் திட்டம், பெண்களுக்கு திருமண நன்கொடை என்று தொடர்ந்து திட்டங்கள் அறிவிக்கப் பட்டுக் கொண்டேயிருக்கும். அதிமுக வந்த பிறகுதான் இரண்டு கட்சிகளுக்கிடையிலான போட்டியில், தமிழகம் குறித்து சிந்திக்க நேரமில்லாமல் போனது இரண்டு கட்சிகளுக்கும். தமிழகத்திடம் இருந்து நிறைய உரிமைகளை ஒன்றியத்திற்கு பறி கொடுத்து விட்டன இரண்டு கட்சிகளும். நீட். பணமதிப்பிழப்பு, சரக்கு சேவைவரி என்று அவைகளைப் பட்டியல் படுத்த முயன்றால் பட்டியல் நீண்டு கொண்டே போகும். தற்போது ஸ்டாலின் ஆட்சி தமிழக மக்கள் தந்த பெரும்பான்மையால் தமிழகத்திற்காக சிந்திக்கும் பழைய திமுகவாக ஆகியிருக்கிறது. அனைத்து பெண்களும், சாதாரண கட்டண பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் திட்டம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு பெண்கள் நடுவே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, இலவச பயணம் என்பது, நல்வாய்ப்பாக அமையும். எடுத்துக்காட்டாக, நாளொன்றுக்கு, 50 ரூபாய் வரை, பணியிடத்திற்கு சென்றுவர, பெண் ஒருவர் செலவிடுகிறார் என கணக்கிட்டால், மாதத்திற்கு, 1,500 ரூபாய் வரை செலவாகும்; தற்போதைய, இலவச கட்டண அறிவிப்பால், அத்தொகை மிச்சமாகும். இலவச பயண அறிவிப்பால், தானிகளையோ, கால் டாக்சிகளையோ நம்பாமல், பெண்கள் எந்த இடங்களுக்கும், தடையின்றி தயக்கமின்றி செல்ல முடியும். இரவு நேரங்களில், இலவசமாக பேருந்துகளில் பயணிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பாக அமையும். அரசின் அறிவிப்பால், வீட்டின் மாதச் செலவில், பெண்களுக்கு பெரும் தொகை மிச்சமாகும். தற்போது, சாதாரண பேருந்துகளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலவச பயண அறிவிப்பை, அரசு விரிவுபடுத்த வேண்டும். சொகுசு மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திலும், பெண்களுக்கு, 25 முதல் 50 விழுக்காடு வரை, கட்டண சலுகை வழங்கினால், சிறப்பாக அமையும். ஊர் பகுதிகளில், காய்கறி, மீன் என, வியாபாரத்திற்கு செல்லும் பெண்களுக்கும், பின்தங்கிய குடும்பத்தில் உள்ள, பெண்கள் வெளியே வரவும், இத்திட்டம் உதவும். அதேபோல், பெண்கள் மேம்பாட்டிற்கும், திட்டங்கள் அறிவிக்க வேண்டும். என்றெல்லாம் பெண்கள் கருத்து தெரிவித்து இந்தத் திட்டத்தை வரவேற்று பாராட்டுகின்றனர்.
தொடக்க காலத் திமுக, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைக்கான கட்சி என்று உலகளவில் கொண்டாடப் பட்டதுண்டு. காரணம் மக்கள் நலத் திட்டங்களைத் தேடித் தேடி கண்டுபிடித்து சாதனை நிகழ்த்திய இந்தியாவின் ஒரே கட்சி திமுக. பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப்பயணம் குறித்து பெண்கள் பெருமிதம் கொள்ளும் காட்சி அரங்கேறியுள்ள ஸ்டாலின் ஆட்சியில், வந்து விட்டது மீண்டும் பழைய திமுக!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.