Show all

சிறப்பான தீர்வு! வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ளது.

கமுக்கத் தன்மையே முறைகேட்டுக்கு வாய்ப்பாகிறது என்பதை கண்டறிந்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ளது. சிறப்பான தீர்வு; வாழ்த்துக்கள்! ஒன்றிய பாஜக நடுவண் அரசும் இதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டால்- இந்தியா ஆட்சிக்கும் நல்ல தீர்வாகும்.
 
25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு அரசுப் பணியாளர் அணி-4 தேர்வு முறைகேடுகள் முன்னெடுப்பு பூதாகரமான நிலையில், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய அணி-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பது அண்மையில் அம்பலமானது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய பலர் தரவரிசைப் பட்டியலில் அதிகமாக இடம்பிடித்திருந்தது ஐயத்திற்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக, தரவரிசைப் பட்டியலின் முதல் 100 இடங்களில் 39 பேர் அந்த இரண்டு மையங்களில் தேர்வெழுதியவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த முன்னெடுப்பில், குற்றப் புலனாய்வு துறைக் காவலர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் இந்த முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முன்னெடுப்பில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில்தான் தமிழ்நாடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு சீர்திருத்தங்களைத் தற்போது கொண்டுவந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முடிவுகளைத் தேர்வாணையம் எடுத்துள்ளது. இதன்படி முதற்கட்டமாகத் தேர்வாணையம் 6 முடிவுகளை உடனடியாக செயல்படுத்தவுள்ளது என்று தெரிவத்து அந்த ஆறு முடிவுகள் என்னென்ன என்பனவற்றையும் தெரிவித்துள்ளது.

1. தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் இறுதியாகத் தேர்வுபெற்ற நபர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும்.
2. தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்கள் இணையதளம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 
3. தேர்வில் பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இனிவரும் காலங்களில் கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாட்களில் இறுதியில் துறைவாரியாகவும் மாவட்ட வாரியாகவும், இடஒதுக்கீடு வாரியாகவும் நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியிடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். 
4. இனிவரும் காலங்களில் தேர்வர்கள் இணையவழியே விண்ணப்பிக்கும்போது மூன்று மாவட்டங்களைத் தங்களுடைய தேர்வு மைய விருப்பமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர். தேர்வு மையங்களைத் தேர்வர்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்.
5. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் கட்டாயமாக்கப்படும். விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்களைப் பதிவு செய்ய வேண்டும். தேர்வு எழுத வரும் தேர்வர்களின் விரல் ரேகையை ஆதார் தகவலோடு ஒப்பிட்டு உண்மைத்தன்மை சரிபார்த்த பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
6. முறைகேடுகளைத் தடுக்கும் வண்ணம் உயர்தொழில் நுட்பத் தீர்வு வரவிருக்கும் தேர்விலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

தேர்வு நடைமுறை சார்ந்த பிற செயல்பாடுகளிலும் விரையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.