கரோனா பாதிப்புக்குள்ளான வடமாநில இளைஞர் சிகிச்சையில் குணமடைந்ததாக தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக தமிழகத்தில் களமாடி வரும் தமிழக நலங்குத்துறையினருக்கு வாழ்த்துக்கள் 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா பாதிப்புக்குள்ளான வடமாநில இளைஞர் சிகிச்சையில் குணமடைந்ததாக தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதலாவதாக கரோனாவிற்கு எதிரான விழிப்புணர்வை தமிழகம் முன்னெடுத்த நிலையில், கொரோனா பாதிப்பு இந்தியாவில் பரவ தொடங்கினாலும் தமிழகத்தில் அதன் பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஓமனிலிருந்து சென்னை திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரும் சிகிச்சையில் குணமடைய கரோனா இல்லாத மாநிலம் என விஜய பாஸ்கர் அறிவித்தார். அவர் அறிவித்த ஓரிரு நாளில் டெல்லியிலிருந்து சென்னைக்கு தொடர்வண்டியில் வந்த உத்தரப் பிரதேச இளைஞர் ஒருவர் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் வேலைத்தேடி இந்த மாதம் தொடக்கத்தில் டெல்லிச் செல்ல அங்கு சில நாள் இருந்த நிலையில் உடல்நலம் பாதித்ததால் நண்பர்களிடம் சொல்லிவிட்டு தொடர்வண்டியில் பயணித்து சென்னை வந்தவர் அரும்பாக்கத்தில் நண்பர்களுடன் அறையில் தங்கியுள்ளார். பின்னர் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் அறையில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்வண்டியில் பயணித்தவர்கள் பட்டியலும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் பலர் கண்டறியப்பட்டாலும், அயல்பரவலில் அயல்நாட்டிலிருந்து வராமல் டெல்லியில் இருந்து வந்து கரோனா தொற்றுக்கு ஆளான அயல்பரவல் தொற்று இந்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மேலும் பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று மாலை 23 ஆனது. காஞ்சிபுரம் பொறியாளர் குணமாகி வீடு சென்றுவிட்டார். இதில் 54 அகவை மதுரையைச் சேர்ந்தவர் உயிரிழந்தது நலங்குத்துறை முயற்சியில் வருத்தத்திற்கு உரிய சோக நிகழ்வாகும். இந்நிலையில்தான் டெல்லியிலிருந்து வந்த இளைஞரும் குணமாகியுள்ளார். இதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இவர்கள் அனைவரும் அயல்பரவல் தலைப்பில் அடங்குகிறவர்களே. தமிழகத்தில் சமூகப் பரவல் இன்னும் இல்லை. இது குறித்து: தமிழகத்தில் 2 வது கரோனா தொற்று நோய் நபர் குணமடைந்தார். டெல்லியிலிருந்து சென்னை வந்த அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது நன்றாக குணமடைந்துள்ளார். அவருக்கு 2 சோதனைகள் எடுக்கப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது அவர் 2 நாளில் இயல்பாக வெளியில் அனுமதிக்கப்படுவார் என்று தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கீச்சுப் பதிவிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



