12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. அவரின் 11 அகவை மகள் சத்யா. இருவரும் தங்களின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் நேற்று விறகு சேகரிக்கச் சென்றனர். வால்பாறை மலைப்பகுதி என்பதால், அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருக்கும், பலநேரங்களில் ஊருக்குள் புகுந்துவிடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்து காட்டுப் பகுதியில் விடுவார்கள். இந்நிலையில், விறகு சேகரிக்க முத்துலட்சுமியும், சத்யாவும் சென்றபோது, காட்டுப் பகுதியில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென இருவர் மீதும் பாய்ந்து தாக்கியது. அதில் சத்யாவின் கழுத்தை கவ்விப் பிடித்த சிறுத்தை அவரைக் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த சத்யாவின் தாய் முத்துலட்சுமி தன்னிடம் இருந்த விறகுக் கட்டையால், வெறித்தனமாக சிறுத்தையை அடித்து, அதனுடன் கடுமையாக சண்டையிட்டு மகளை மீட்கப் போராடினார். ஒரு கட்டத்தில் சிறுத்தையும், முத்துலட்சுமியின் அடிதாங்க முடியாமல், சத்யாவை விட்டுவிட்டு காட்டுப் பகுதிக்குள் ஓடியது. சிறுத்தையிடம் காயம் பட்ட சத்யாவை, முத்துலட்சுமி தூக்கிக்கொண்டு ஊருக்குள் வந்தார். இருவரையும் கண்ட மக்கள், உடனடியாக வால்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் முத்துலட்சுமிக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டு இருந்தது, ஆனால், சத்யாவுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், அவரைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊருக்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினரும் இறங்கியுள்ளனர். கடந்த 10 நாட்களாக மக்கள் வசிக்கும் பகுதியில் சிறுத்தை சுற்றிவருவதாக வால்பாறையைச் சுற்றி இருக்கும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மகளை மீட்பதற்கு ஒற்றையாக சிறுத்தையையே எதிர்த்து போராடிய தாயின் வீரம்... வீரம் என்பதை விட அந்தத் தாயின் பாசம்! என்பதுதான் உண்மை. சத்யா நலமுடன் திரும்பிட நம்முடைய வாழ்த்துகளைப் பதிவு செய்வோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,799.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



