12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசை ஆள பாஜக பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கீச்சுவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான எங்களின் பயணம் தொடங்கினோம். கடந்த 4 ஆண்டுகளாக, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஒவ்வொரு குடிமகனும் அளித்த ஒத்துழைப்பு காரணமாக வளர்ச்சி என்பது பேரியக்கமாக உருவெடுத்துள்ளது. 125 கோடி இந்தியர்களும் இந்தியாவை மிகப் பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பாஜக அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களை தலைவணங்குகிறேன். இந்த ஆதரவும், அன்பும் தான் ஒட்டுமொத்த அரசின் வலிமை மற்றும் ஊக்கத்திற்கு காரணம். மக்களின் ஆதரவால்தான் நடுவண் அரசு வலிமையாக செயல்பட முடிகிறது. இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் நடுவண் பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும். என்று மோடி இந்தியக் குடிமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். நன்றி தெரிவிக்கும் முகமாக மக்களுக்கான ஒரு சிறிய அறிவிப்பு கூட இல்லை. கருப்புப் பண மீட்பில் நமக்கு தருவதாகச் சொல்லியருந்த அந்த நமது வங்கிக் கணக்கில் பதினைந்து இலட்சம் அந்த அறிவிப்பையாவது வெளியிட்டிருக்கலாம். சரி! மோடியின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பாக இருந்தோம். அரசின் கருவூலம் நிரம்புவதற்கு நாம் ஒத்துழைப்பாய் இருந்தோம். மோடிக்கு ஆதரவாக இருக்கிற அறங்கூற்று மன்றத்தின் ஆணைகளுக்கெல்லாம் நாம் ஒத்துழைப்பாய் இருந்தோம். பெட்ரோல், டீசல், விலைவாசி ஏற்றங்களுக்கு எல்லாம் ஒத்துழைப்பாய் இருந்தோம். மாநிலக் கல்வி உரமையைப் பிடுங்கும் நீட்டுக்கு ஒத்துழைப்பாய் இருந்தோம். நீட் தேர்வில் அவர்கள் அடாவடிக்கெல்லாம் ஒத்துழைப்பாய் இருந்தோம். இந்த நேரத்தில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்கலாமா? (!) தலைநகர் டெல்லி வீதிகளில் 100 நாட்களுக்கும் மேலாக எலியை வாயில் கவ்விக்கொண்டு கோரிக்கைகளுக்காகப் போராடிய தமிழக உழவர்களை ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசாதது ஏன்? (!) எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியதால், மக்கள் தவிப்புக்கு உள்ளாகி, வங்கி வாசலில் கால்கடுக்க நின்றதுடன், இந்தியா முழுவதும் அகவை முதிர்ந்தவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்களே... அவர்களின் குடும்பங்களுக்கு உங்கள் பதில் என்ன? (!) காஷ்மீரில் ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே குரல் கொடுத்தார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன? (!) ஒட்டுமொத்த தமிழர்களையும் பொறுக்கி என உங்கள் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம் செய்தார். தொடர்ந்து அவரைக் கட்சியில் பாதுகாத்து வருகிறீர்களே, அதற்கு உங்கள் பதில் என்ன? (!) பெரியார் சிலையை உடைப்பேன் என்று கீச்சு பதிவு செய்கிறார் உங்கள் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. கேட்டால் சமூக வலைதளத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர் பதிவிட்டதாகக் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை நீங்கள் எடுக்காதது ஏன்? (!) மெரினா போராட்டத்தில் தமிழக காவல் துறையினர் அப்பாவி இளைஞர்களை ஓட, ஓட விரட்டியடித்தார்களே.... அந்த விவகாரம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையே ஏன்? (!) வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கும் நிகழ்வு இன்றுவரை தொடர்கிறது. அந்தவகையில் தமிழக மீனவர் பிரச்னை தீர்க்கப்படாமலேயே நீடிக்கிறது. நீங்கள் இலங்கைக்கு பயணம் செய்த பிறகும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லையே... இதற்கு உங்கள் பதில் என்ன? (!) சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்ட போது கலவரம் வெடித்து பல உயிர்கள் மாண்டு போனதே. அப்போது நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை? (!) காவிரிப் பிரச்னையில் உச்ச அறங்கூற்றுமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிட்ட பின்னரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்வைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க அம்மாநில அரசை நீங்கள் வலியுறுத்தவில்லையே ஏன்? (!) நீட் தேர்வு விவகாரத்தில் அனிதாவின் மரணத்துக்கும், இந்தாண்டு தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு அனுப்பியதற்கும், மாணவ, மாணவிகளை மோசமான முறையில் சோதனை நடத்தப்பட்டதற்கும் உங்களிடம் இருந்து எந்தவொரு கண்டனமும் வரவில்லையே தலைமை அமைச்சரே (!) புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் 100 நாட்களுக்கும் மேலாகப் போராடிய மக்கள் பற்றி நீங்கள் என்றுமே பேசாதது ஏன்? (!) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், தமிழக அரசையும், காவல்துறையையும் ஒரு வார்த்தைகூட கேட்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? (!) இந்தியாவின் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி சிலர் கொல்லப்பட்டார்களே... அவர்களைக் கொன்றவர்களைப் பற்றி ஒருமுறைகூட பேசவில்லையே ஏன்? (!) மஹாராஷ்ட்ராவில் ஒரே இரவில் லட்சக்கணக்கில் கூடிய உழவர்கள், காலில் வெடிப்புடன், தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடினார்களே, அந்த மக்களுக்கு உங்கள் பதில் என்ன? (!) பக்கோடா போடுவதையெல்லாம் வேலைவாய்ப்புப் பட்டியலில் இணைத்து நாடாளுமன்றத்தில் பேசினாரே உங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா. அவருக்கு உங்கள் பதில் என்ன? (!) கறுப்புப்பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவருவேன் என்று சொல்லி, இதுவரை ஒரு ரூபாயையோ அல்லது ஒருவர் பெயரையோகூட கொண்டு வராமல் இருப்பது ஏன்? எங்கள் வங்கிக் கணக்கில் பத்து ரூபாய் கூட போடக் காணோமே அது ஏன்? (!) ஆதார் தகவல்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்துகொண்டே இருக்கிறதே. இந்த சர்ச்சைக்கு இதுவரை பிரதமர் பதிலளிக்காதது ஏன்? (!) பெட்ரோல், டீசல் விலை உங்கள் ஆட்சிக்காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதே. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்கினாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் அதிகரிக்கிறதே. இதற்கு உங்கள் பதில் என்ன? (!) பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என மார்தட்டிக் கொள்ளும் நீங்கள், ஆட்சிக்கு வரும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 ஆக இருந்தது. இப்போது 67 ரூபாயாக சரிந்துள்ளதே. இதற்கு உங்கள் பதில் என்ன? (!) நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட இதழியலாளர்களைச் சந்திக்காத தலைமை அமைச்சர் என்ற சாதனையை வைத்திருக்கிறீர்களே. ஏன் பதில் சொல்லத் தயங்குகிறீர்கள்? இத்தனை கேள்விகளை வைத்துள்ள நாங்கள், உங்களை வளர்த்து விட்டதாகவும் வலுப்படுத்தியதாகவும் சொல்கிறீர்கள். உண்மையிலேயே நாங்கள் தான் விரும்பி உங்களை வளர்த்து விட்டோம் என்றால் இப்படி சாதரணமாகவா நன்றி சொல்லி விட்டுப் போவீர்கள்? நாங்கள் எத்தனையோ அரசியல் வாதிகளின் நன்றியுணர்ச்சிகளை அனுபவித்திருக்கிறோம். நேரு, இந்திரா, ராஜிவ், எம்ஜியார், கருணாநிதி, செயலலிதா, என்று தினகரன் வரை எத்தனையோ நன்றியுணர்ச்சிகளில் திளைத்திருக்கிறோம். உங்கள் நன்றியில் நமட்டுச் சிரிப்பு தெரிகிறது. உங்கள் நன்றியில் தெனாவெட்டு தெரிகிறது. இந்தியா முழுக்க நமக்கு எதிர்ப்பலைகள்; தமிழகத்தின் எதிர்ப்பலை எழுபத்தைந்து விழுக்காடாம்; இந்த நிலையில் இவர்களுக்கு நன்றியா! நமது நன்றி வாக்கு இயந்திரங்களுக்கு மட்டுமே. என்பதுதானே? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,799.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



