Show all

முடிவு தேடிக் கொண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி நிரந்தரத் தீர்வாகாது தலைவா! முடிவு கட்டுங்கள் நீட்டுக்கு நிரந்தரமாக

நீட் தேர்வை எதிர்கொள்ள அஞ்சி தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ரூ.7 லட்சம் நிதியுதவி. இது நிரந்தரத் தீர்வாகாது தலைவா! முடிவு கட்டுங்கள் நீட்டுக்கு நிரந்தரமாக

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மருதூர் மதுரா இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்  மகன் விக்னேஷ் நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்த மன உளைச்சல் காரணமாக நேற்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டு. மாணவன் இறப்புக்கு இரங்கல் தெரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர். 

இந்தத் துயர நிகழ்வில் உயிரிழந்த செல்வன் விக்னேஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தினை அறிந்து நல்வழிப்படுத்திட வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மாணவ செல்வங்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.