ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சோகம் என்றாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக எதிர்காலத்திற்கான உற்சாகம். 25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும் என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவன் கவின் கூறும் 10 காரணங்கள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் விருப்பங்களை அள்ளிக் குவித்து ஆடிப்பாடி மகிழ்ந்து வருகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வேறு பள்ளிகளில் இருந்து மாறுதல் பெறும் மாணவர்களுக்கும் சேர்க்கை தொடங்கியது. ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கடந்த மாத இறுதியிலேயே மாணவர் சேர்க்கை 10 லட்சத்தைத் தாண்டியது. தற்போது 12 லட்சத்தைத் தாண்டி மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து வருகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஏன் படிக்கவேண்டும் என்று திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர் கவின் என்பவர், காரணங்களை அடுக்கியுள்ள காணொளி இணையத்தில் தீயாகி வருகிறது. அவர் பட்டியல் இடும் காரணங்கள்: 1.அரசுப்பள்ளி ஆசிரியர்களின் திறமை. 2.புத்தகப் புழுவாக இல்லாமல் கற்றல் இணைச் செயல்பாடுகளுக்கான வாய்ப்பு. 3.சுவையான சத்துணவு. 4.பெற்றோர்களுக்கு உரிய அங்கீகாரம். 5.ஆசிரியர்களுடன் இயல்பாகப் பேசுவதற்கான வாய்ப்பு. 6.மன அழுத்தமில்லாத சூழல். 7.தனிநபர் சொத்தாக அல்லாமல் அனைவருக்குமான சமூகப் பங்கேற்பு. 8.விலையில்லாக் கற்றல் பொருட்கள். 9.தரமான கட்டமைப்பு வசதி. 10.விலைமதிப்பற்ற கல்வியை விலையில்லாமல் கற்பதால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு எதிர்காலச் சேமிப்பு. என அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் கவின் விளக்குகிறார். கவினின் பெற்றோரான திருவாரூர் குளிக்கரை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கௌதம், திருநெய்ப்பேர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பாரதி ஆகிய இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



