பேரறிமுக சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி சென்னையில் இன்று காலமானார். ஆழ்ந்த இரங்கல் பதிவுகள் இணையத்தைக் கண்ணீரால் நனைத்து வருகின்றன. 25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நெஞ்சுவலி காரணமாக வடிவேல் பாலாஜி கடந்த 15 நாட்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அங்கு மருத்துவமனையில் கட்டணம் செலுத்த முடியாத நிலையால் வடிவேல் பாலாஜியின் குடும்பம் தவித்தது. இதனால் அவர் இராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தான், இன்று காலை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தமிழக சின்னத்திரையில் பேரறிமுக நடிகராக வடிவேலு பாலாஜி விளங்கினார். மதுரையில் பிறந்த அவர் திரைப்பட நடிகர் வடிவேலு மீது அளப்பரிய அன்பு கொண்ட காரணத்தால் தன் பெயருக்கு முன்னால் வடிவேலு என்ற பெயரை சேர்த்துக் கொண்டார். நடிகர் வடிவேலுவின் சாயல் இருப்பதால், அவரைப் போல் உடை அணிந்தவாறு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிறகு கோலமாவு கோகிலா உள்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது திடீர் மரணம், திரை கொண்டாடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வடிவேல் பாலாஜியுடன் நெருக்கமாக சின்னத்திரை உலகில் பயணம் செய்த பலரும் அவரது மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். அவருடன் சின்னத்திரை உலகிலும் மேடை நிகழ்ச்சிகளும் 19 ஆண்டுகளாக நடித்த ரோபா சங்கர், வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகக் கூறி ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல் பதிவுகள் இணையத்தைக் கண்ணீரால் நனைத்து வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



