என்ன ஆகப்போகிறதோ திமுக! அமித்சா தமிழகம் வந்து கலக்கிவிட்டு போய்விட்டாரே. என்று சில பாஜகவினர், தாங்கள் திமுக ஆதரவாளர்கள் போல வேடமிட்டு, நீலிக்கண்ணீர் வடித்து பாஜகவுக்கு கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார்கள். 09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகம் வந்த அமித்சாவால் ஒன்றே ஒன்றுதான் சாதிக்க முடியும். அது அதிமுகவை மிரட்டி தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு அதிக இடங்கள் பெறுவது மட்டுமே. ஏனென்றால் அவர்களுக்கு எடப்பாடியும், பன்னீரும் நிறைய கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஒற்றைத் தமிழன் கூட ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜகவால் அணுவளவு ஆதாயம் பெற்றதற்கு ஆதாயம் ஏதும் இல்லை. ஏன்? எல்.முருகன் கூட பாஜகவிற்கு இவ்வளவு வேலை செய்வது- ஏதோ நம்பிக்கை அடிப்படையில்தான். ஒரே ஒரு நாளில் பலவித அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளார் அமித்சா என்று பாஜக ஆதரவு ஊடகங்கள் தலைப்பிட்டாலும் அவர் சாதித்தது என்னெவென்று எந்தச் செய்தியையும் அந்தத் தலைப்பின் கீழ் எந்த ஊடகமும் முன்னெடுக்கவில்லை. அமித்சா வருவதற்கு முன்புவரை, பாஜகவை அதிமுக கூட்டணியில் சேர்க்குமா? சேர்க்காதா என்ற ஐயம்தான் இருந்தது. அதற்கு காரணம், எல்.முருகன் பொறுப்பேற்றது முதல் அதிமுகவுடனான பல பாடுகளில் மனக்கசப்பு ஏற்பட்டது. தன்னுடைய அதிருப்தியை முருகன் பொதுவெளியில் வெளிப்படுத்தியதுடன், கோட்டையில் காவி கொடி பறக்கும் என்றும் சொல்லி அதிமுகவை உசுப்பேத்தினார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையிடம் முடிவு செய்யும் என்றார். பாஜகவிற்கு 60 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்றார். அதிமுகவின் அம்மா நாளிதழில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தனித்து போட்டி என்று கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஒரே போடாக போட, அலறி கொண்டு ஓடிப்போய் முதல்வரை சந்தித்தார் எல்.முருகன். இருந்தாலும் வேல் யாத்திரையில் பாஜகவை மொத்தமாக கட்டிப்போட்டது அதிமுக தரப்பு. அத்துடன் நில்லாமல் நமது அம்மா நாளிதழில் வெளிப்படையாகவே ஹிந்துத்துவா அரசியலை விமர்சித்து தமிழக பாஜகவின் தலையில் கொட்டு வைத்தது. அப்புறம் பாஜகவின் சதியை முறியடித்து அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு என்றெல்லாம் நிமிர்ந்து நின்றது அதிமுக. இந்த நிலையில்தான் அமித்சா ஓடோடி வந்தார் தமிழகம். வானூர்தி நிலையம் வந்திறங்கிய அமித்சாவுக்கு அதிமுகவினர் திரண்டு கூடி வரவேற்பளித்தது ஓன்றிய ஆட்சிக்கு அன்றி, தனிப்பட்ட பாஜகவற்கு அல்ல என்பதே உண்மை. அதற்கும் மேலாக விருந்தோம்பல் தமிழனின் உயரிய கலாச்சாரம். இந்த நிலையில்தான், தமிழக அரசியலையே அசைத்து விட்டு போயுள்ளது அமித்சா தமிழகவருகை. இதை திமுக நோய்வந்தது போலவே உற்று கவனிக்க வேண்டும். ஒரு எச்சரிக்கை குறியாகவே அணுக வேண்டியும் உள்ளது. பீகார் போல தமிழகத்தை மாற்ற, இவர்களுக்கு நேரம் பிடிக்காது. எனவே இன்னமும் மெத்தன போக்கு, இன்றைய பாஜகவுக்கு பொருந்தாது. தொடர்ந்து அலட்சியப் போக்கில் திமுக கூட்டணி இருப்பதை போலவே தென்படுகிறது. உடனடியாக சுதாரித்து கொள்ளுமா அறிவாலயம்? என்று சில பாஜகவினர், தாங்கள் திமுக ஆதரவாளர்கள் போல வேடமிட்டு, நீலிக்கண்ணீர் வடித்து பாஜகவுக்கு கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார்கள். பாஜகவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு அதிக தொகுதிகளை அதிமுக ஒதுக்கினாலும் அது திமுகவிற்கான நல்வாய்ப்பாகவே அமையும். அதிமுகவை எதிர்கொள்வதில் ஆயிரத்தில் ஒரு மடங்கு வலிமையிலேயே பாஜகவை திமுக வீழ்த்தி விடும். மேலும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுகவை எதிர்கொள்வதை விட பாஜகவை எதிர்கொள்வது மிக மிக எளிதாகவே அமையும். திமுகவும், திமுக கூட்டணியும் எதிர் நோக்குவது அதிமுக பாஜகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கித் தரவேண்டும் என்பதுதான். அமித்சாவெல்லாம் திமுகவிற்கு ஒருபொருட்டே இல்லை. ஏன் அதிமுகவிற்கு கூடத்தான். எட்பாடியாரும், பன்னீரும் சசிகலாவிற்கு பணியாத பணிவா? அமித்சாவிடம் பணிந்து விட்டார்கள். எடப்பாடியாரும், பன்னீரும் சும்மா பதுங்குகிறார்கள்; பாய்வதுதான் அவர்களின் இயல்பு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



