தமிழகத்தில் இலவச மின்சாரம் இரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இலவச மின்சாரம் இரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் முக்கொம்பில் நடைபெற்று வரும் அணை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக திருச்சி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரூ.25 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த ஆண்டு 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியதோடு, கொள்ளிடத்தில் ரூ.495 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். குறுவை சாகுபடிக்காக பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வழக்கமான நாளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். மேலும், கர்நாடகாவில் இருந்து உரிய அளவு தண்ணீர் பெற ஆணையம் மூலம் முறையாக வலியுறுத்தி பெறப்படும் எனக் கூறினார். இதனிடையே இலவச மின்சாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் இலவச மின்சாரம் தொடரும் என்றும், இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது எனவும் உறுதியளித்தார். புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கு மாநிலங்களின் கருத்து கேட்கப்பட்டுள்ள நிலையில் இலவச மின்சாரத்தில் நாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



