வரும் செவ்வாய் கிழமையோடு வருகைப் பதிவை பின்பற்றுகிற அமைப்புகளுக்கு ஊரடங்கை முடித்துக் கொள்வது சிறப்பு. மக்களால் அரசின் முழுமையான நிவாரணம் இல்லாத ஊரடங்கை இனியும் சுமக்க முடியாது. நிறுத்திக் கொள்ளுங்கள். 12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பாதிக்கப்படலாம் என்கிற வாய்ப்புக்கான ஆபத்தே கொரோனா. கொரோனாவை எதிர்கொள்வதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. அதில் ஒரேயொரு வழிதான் ஊரடங்கு. ஊரடங்கு என்பது வினாடிக்கு வினாடி. உறுதியாக, ஒவ்வொருவரையும் பாதிக்கக் கூடிய மிகப் பெரிய ஆபத்து ஆகும். அந்தப் பாதிப்பை மக்களே சுமக்கிறார்கள் என்பதற்காக தொடர்ந்து அரசு ஊரடங்கை முன்னெடுப்பது பொறுப்பற்ற, அடாவடி, அதிகாரப்பாட்டுச் செயலாகும். டாஸ்மாக் இயங்கா என்பதிலோ, விமானங்கள் இயங்கா என்பதிலோ, தொடர்வண்டிகள் இயங்கா என்பதிலோ, பேருந்துகள் இயங்கா என்பதிலோ, சுற்றுலாதளங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இயங்கா என்பதிலோ மக்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. தெருவில் மக்கள் கூட்டமாக நடமாடத் தடை விதிக்கலாம். அதில் பாதிப்பு யாருக்கும் இருக்காது. இப்படி அடையாளம் காணப்படாமல் மக்கள் குவிகிற அமைப்புகள் மட்டுமே கொரோனா பரவலைக் கண்டுபிடிக்க முடியாத சிக்கலான இயக்கத்திற்கு உரியதாகும். அவைகள் இயங்க தடை விதிக்கப்படும்போது அந்த குறிப்பிட்ட அமைப்புகள் பாதிக்கப்படும் என்பது உண்மை. அவர்களுக்கான நிவாரணம் அரசின் பொறுப்பு ஆகும். ஏளிதாக அடையாளம் காணும் வகையான பலருக்கு வாழ்வாதாரம் வழங்கும் பெரிய நிறுவனங்கள், தனிநபரின் தொழில் வணிக நிறுவனங்கள், அடையாளத்தோடு கூடும் எந்த நிறுவனமும் இயங்க தடை செய்யப்படத் தேவையில்லவேயில்லை. அதாவது வருகையைப் பதிவு செய்கிற எந்த நிறுவனங்களுக்கும் இயங்க தடைவிதிக்க வேண்டிய தேவையில்லவேயில்லை. அந்த அமைப்புகளில் யாருக்காவது கொரோனா பாதித்தால் அவர் யாரையெல்லாம் பாதித்திருப்பார் என்று கண்டுபிடிப்பது மிக மிக எளிது. கொரோனாவை எளிதாக குணப்படுத்திக் கொண்டுதாம் இருக்கிறோம். புதிய புதிய மருந்துகளும் சிகிச்சை முறைகளும் வந்து கொண்டுதாம் இருக்கின்றன. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து மட்டும் வந்து விட்டால் கொரோனா குறித்து அச்சத்தை எளிதாகச் சுழியம் ஆக்கி விடலாம். உண்மையில் நாம் இதுவரை முன்னெடுத்த ஊரடங்கால் கொரேனா பரவலை எத்தனை விழுக்காடு தடுத்து விட்டோம் என்பது அவரவர் நெஞ்சுக்குத் தெரியும். ஆனால் ஊரடங்கால் நாம் இழந்தது மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு மீட்க முடியாத பேரிழப்பு ஆகும். அரசிலும், பெரிய பெரிய தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் நபர்களுக்கு மட்டுமே பொருளாதார இழப்பை அரசும்; நிறுவனங்களும் தாங்கள் மீது சுமத்திக் கொண்டன. மற்றபடி எல்லோருக்கும் இழப்புதான். கொரோனா பாதிப்பு என்பது உயிர்ப்பலிகள் மட்டுந்தாம். அதைத் தவிற்க வேண்டியது மருத்துவத் துறையின், அரசின் பொறுப்பு. ஆனால் ஊரடங்கு பாதிப்பு பேரளவானது. அதற்கான நிவாரணத்திற்கு தாங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கான நிலையிலேயே அரசு துணிந்து மீண்டும் மீண்டும் ஊரடங்கை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. வரும் செவ்வாய் கிழமையோடு வருகைப் பதிவை பின்பற்றுகிற அமைப்புகளுக்கு ஊரடங்கை முடித்துக் கொள்வது சிறப்பு. மக்களால் அரசின் முழுமையான நிவாரணம் இல்லாத ஊரடங்கை இனியும் சுமக்க முடியாது. நிறுத்திக் கொள்ளுங்கள். வரும் செவ்வாய்க் கிழமைவரை இருக்கும் இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நடுவண் அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நுண்நச்சு பாதிப்பு என்பது மருத்துவத் துறை சார்ந்த சிக்கல் என்பதால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படியே தொடர்ந்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படவே இல்லை. தற்போதுகூட வரும் திங்கள்கிழமை கொரோனா நோய்த்தொற்று நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதனடிப்படையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். இல்லை முதல்வர் அவர்களே! நீங்கள் சொல்லுவது தவறு. கொரோனா, பரிசோதனை, சிகிச்சை இவைதாம் மருத்துவ துறை சார்ந்தது.
இடவசதி, மருத்துவமனை, பரிசோதனைக் கருவிகள், மருத்துவத் துறை முன்மொழியும் மருந்துக்கள் இவையெல்லாம் அரசு சார்ந்தது. அரசு என்பதில் நாளைய அரசாக அமையப்போகிற எதிர்க்கட்சிகளுக்கும் உரிய பங்கு உண்டு.
ஊரடங்கு மருத்துவத் துறை சார்ந்த சிக்கல் அல்லவே அல்ல. அது மக்கள் சார்ந்தது. அதற்கு மக்கள் ஒப்புதல் கட்டாயம் வேண்டும்.
மக்களுக்கு முழு நிவாரணத்திற்கு அரசு பொறுப்பு எடுத்துக் கொள்ளுமானால், கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அதிகாரமாக ஊரடங்கை முன்னெடுக்கலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



