எச்.இராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு எதிர்மறைத் தாக்கம் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையைத் அன்றாடம் எதிர்கொள்ள நேரிடும் என பாஜகவின் இந்திய நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் பெயர்ப்பட்டியலே தயாராகவில்லை என்பதால், மாநிலத் தலைவரை நியமிக்க நீண்ட நாள்கள் ஆகலாம் என்று தெரிகிறது. 20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை, அண்மையில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதினால் அந்த இடம் தற்போது காலியாக இருக்கிறது. அந்த இடத்தை நிரப்பிட தங்கள் பெயர் அடிபடாதா என்ற ஏக்கத்தில் சில நாட்களாக, டெல்லிக்குச் செல்லும் விமானங்களில் தமிழக பாஜக தலைவர்களை அதிகம் காண முடிவதாக நையாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. பாஜக இந்தியச் செயலாளர் எச்.இராஜாவில் தொடங்கி, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுப்பிரமணிய பிரசாத் வரை அன்றாடம் ஒருவரின் பெயர், தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. உண்மையில், மாநிலத் தலைவரை நியமிக்கும் பணியை இன்னும் டெல்லி மேலிடம் தொடங்கவே இல்லையாம். மாநிலத் தலைவர் பதவிக்கு, 5 முதல் 7 பேரின் பெயர் கொண்ட பட்டியலை பாஜக இந்திய நிர்வாகிகளும் மேற்பார்வையாளர்களும் தயார்செய்வார்கள். இப்பட்டியலில் உள்ளவர்களின் பின்புலம், இந்திய உளவுத்துறை மூலமாக சோதனை செய்யப்பட்ட பின்னர், பெயர் பட்டியல் பாஜக நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்படும். பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மாநிலத் தலைவராக இக்குழு அறிவிக்கும். இதுதான் நடைமுறை என்றாலும், ஏற்கெனவே அமித்சாவும் மோடியும் தேர்ந்தெடுத்த ஒருவர்தான் தலைவராகப் பதவி பெறுவார். தலைவர் பதவிக்கான பந்தயத்தில் எச்.இராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கிருஷ்ணகிரி நரசிம்மன், வானதி சீனிவாசன், கோவை முருகானந்தம், திருத்தணி ரவிராஜ், ராமநாதபுரம் குப்புராமு உள்ளிட்டோர் உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள அறிமுகவட்டாரம் மூலமாக பாஜக தலைமையை நெருங்குகிறார்கள். இதில், எச்.இராஜா, வானதி சீனிவாசன் இருவருக்கும் மாநிலத் தலைவர் பதவியளிக்க டெல்லி மேலிடம் யோசிக்கிறது. எச்.இராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு எதிர்மறைத் தாக்கம் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையைத் அன்றாடம் எதிர்கொள்ள நேரிடும் என இந்திய நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசுகிறார்கள். வானதி சீனிவாசன் மீது அடுக்கடுக்கான புகார்களை தமிழக நிர்வாகிகள் டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். இதைத் தகர்த்தெறிவது அவருக்கு சவாலான காரியம்தான். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் பெயர்ப்பட்டியலே தயாராகவில்லை என்பதால், மாநிலத் தலைவரை நியமிக்க நீண்ட நாள்கள் ஆகலாம் என்று தெரிகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,267.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



