22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாதியை ஒழிப்பதற்காக பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது சாதி பெயரை தவிர்க்க வலியுறுத்திய நடிகர் கமல் ஹாசன்: அவரது திரைப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ள சபாஷ் நாயுடு என்ற சாதி பெயரை மாற்ற முடியாது என்று தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்தின் பெயரில் சாதிப்பெயர் உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் கூறுகையில், சபாஷ் நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 விழுக்காடு நிறைவடைந்து விட்டது. இப்போது படத்தின் பெயரை மாற்றுவதற்கான தேவை கிடையாது. படத்தின் பெயரில் சாதிப் பெயர் இருப்பதாலேயே சாதியைக் கொண்டாடுவதாக ஆகிவிடாது என்று தெரிவித்துள்ளார். சபாஷ் என்ற அடைமொழியுடன் ஒரு சாதியின் பெயரை குறிப்பிடப்பட்டிருந்தும் கூட, சாதியை கொண்டாடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளி சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடாததாலேயே சாதியை தவிர்த்து விடலாம் என்று கூறிய கமல்ஹாசன் பல லட்சம் மக்களை சென்றடைய கூடிய திரைப்படம் என்ற சாதனத்தில் சபாஷ் என்ற அடைமொழியுடன் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிடுவது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. கமலின் கருத்து அடிப்படையில், நடைமுறையில் சாதி இருந்து விட்டு போகட்டும். ஆவணப் பதிவாக சாதி வேண்டாம் என்று சொல்லுவதாகத் தெரிகிறது. ஆவணத்தில் இருந்தால் தானே சமூகநீதி, சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசமுடியும்? அதை ஒழித்து விட்டால், சமூகநீதி, சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்கிற போராட்டம் எல்லாவற்றையும் ஒழித்து விடலாமே என்கிற மேல்தட்டு சிந்தனைக்கு வித்திடுகிறாரா கமல்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,840.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



