பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழனின் நலங்குத் துறையில் முதன்மைப் பொருள்: மஞ்சள். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வாழ்வியலில் முதன்மை துறை: நலங்கு. தற்போது கொரோனா பரவல் தடையில்- தமிழக மக்களால் நாடு தழுவி முன்னெக்கப் பட்டிருக்கிறது மஞ்சள். 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்- மருத்துவத் துறைக்கு அடிப்படையான நலங்குத்துறையில் (சுகாதாரம்) முதன்மைப் பொருளாக முன்னெடுத்தது மஞ்சள். தமிழர் வாழ்வியலில்- திருமணம், வளைகாப்பு, பூப்புநன்னீராட்டில் மணமக்கள், கருவுற்ற தாய், பூப்பு எய்திய மங்கை ஆகியோருக்கு நோய் தொற்று வராமல் காப்பு செய்ய தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகவே முன்னெடுத்த நலங்குப் பொருள் மஞ்சள். ஒவ்வொரு முறையும் மஞ்சளால் நலங்கு வைத்துக் குளிக்கச் செய்வார்கள். புதிதாக ஒரு வீட்டில் குடிபுகும்போது மஞ்சள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை முதன்மைப் பொருளாக எடுத்துச் செல்வர். அழைப்;பிதழ்களில் மஞ்சள், புதுக்கணக்கில் மஞ்சள், மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்துதான் ஆரத்தி எடுக்கின்றனர். விழா நாட்களில் வாசல் கதவு, படிகட்டு இவற்றில் மஞ்சள் பூசுவர். பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பது முகத்தில் தோன்றும் பரு, கரும்புள்ளிகள் தோன்றாமலிருக்க காப்பாகும். மஞ்சள் கலந்த அரிசிதான் மணமக்களை வாழ்த்த தூவப்படுகிறது. மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, பிராங்கைட்டிஸ் என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும். மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து அழுத்தம் கொடுக்க, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும். மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி சரியாகும். பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது. கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கத்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்;. சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம். கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும். கத்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது. காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும். மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளி சிக்கல் இருக்காது. மஞ்சள் மிகச் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது. வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும். அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் தொல்லை நீங்கும். குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி - கடுப்பு ஏற்படும். மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் நஞ்சு முறியும்; வலி குறையும். தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும். சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும். சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும். மஞ்சளையும் சந்தனத்தையும் சம அளவில் அரைத்துப் பருக்களின் மீது தடவிவந்தால், சில நாட்களிலேயே பருக்கள் மறைந்துவிடும். அடிபட்ட காயங்களின் மீது மஞ்சளைப் பூச, இரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும். இன்றைக்கு வெகுவாகக் குறைந்துவிட்ட அந்த அந்தப் பழக்கத்தை தற்போது கொரோனா மீட்டெடுத்து இருக்கிறது. தமிழக மக்கள் கொரோனா பரவலுக்கு எதிரான நலங்குப் பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். நடப்பு நாடு தழுவிய 21நாள் ஊரடங்கு நாட்களில் கடைகளில் மஞ்சள் பொடிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வாழ்க பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் நலங்கில் முன்னெடுக்கப் பட்டு வரும் மஞ்சள். காப்பு செய்வோம் சமூகபரவல் கொரோனாவிலிருந்து. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் கடந்து சென்று விற்று, தங்கத்தை செலாவணியாகப் பெற்று வந்தபோது, பழந்தமிழனது வணிகப் பொருள் இந்த மஞ்சள். இன்றைக்கும் ஈரோட்டு மஞ்சள் அன்னியச் செலாவணி ஈட்டித்தரும் வணிகப்பொருளே. உலக மஞ்சள் உற்பத்தியில் 91 விழுக்காடு இந்தியாவில்தான் விளைகிறது. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 80,000 டன் மஞ்சள் ஏற்றுமதியாகிறது. உள்ளூர் சந்தையில் ரூ.8,000 க்கு விற்பனையாகும் மஞ்சள், உலக சந்தையில் ரூ.15,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 விழுக்காட்டிற்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35-40 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை 65 கிலோ). இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் சுமார் 2 லட்சம் மூட்டைகள் ஈரோடு சுற்று வட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுபவையே. பெண்கள் முக அழகுக்காகப் பயன்படுத்தும் விரலி மஞ்சள் இங்குதான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சள் சந்தைகளை கட்டுப்படுத்தும் வலிமை பெற்றது ஈரோடு. இந்தியாவைப் பொருத்தவரை தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத், மஹாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் மூன்று இடங்களில்தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது. அதில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள் நிறமி (குர்குமின்) அளவு அதிகம். 3 முதல் 5 விழுக்காடு வரை கிடைக்கும். மற்ற பகுதிகளில் இவ்வளவு கிடைக்காது. வெளி மாநிலங்களில் ஈரோடு விதை மஞ்சளுக்கு மவுசு அதிகம். தெலங்கானா மாநில எல்லையில் உள்ள மஹாராஷ்டிர மாநில பகுதிகளான சாங்கிலி, பஸ்மத், நான்டெட், பொக்கார், ஹிங்கோலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மஞ்சள் சாகுபடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அப்பகுதியில் விவசாயத்துக்கான நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டதுதான். மஹாராஷ்டிர மாநில விவசாயிகள் அந்த மண்ணில் விளையும் மஞ்சளை விதைக்கு வைத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு மாவட்டத்தில் இருந்துதான் விதை மஞ்சளை வாங்கிச் செல்கின்றனர். வேறு மண்ணில் இருந்து மஞ்சளை வாங்கி பயிரிடுவதால் தரமான மஞ்சள் கிடைக்கிறது. மஞ்சள் சந்தையைப் பொருத்த அளவில் இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு பண்பு நலன்கள், காரணமாக உலகெங்கும் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ள மக்களிடம் அதனுடைய செல்வாக்கு அண்மை ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொருத்த அளவில் மஞ்சள் இன்னும் பல வகையான இந்திய கறி வகைகளிலும், பிரியாணி, பிற உணவுப் பொருள்களில்தான் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஜப்பான், மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்காவுக்கு 10 லட்சம் மூட்டைகள் ஏற்றுமதியாகிறது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் மஞ்சள் ஏற்றுமதியில் 80 விழுக்காடு அளவுக்கு இந்தியாவுடையதாக உள்ளது. இதில் ஈரோடு மஞ்சளில் குர்குமின் அளவு அதிகமாக இருப்பதால் ஏற்றுமதியாளர்களின் தேர்வில் ஈரோடு மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏற்றுமதியில் ஈரோடு மஞ்சள் 10 முதல் 20 விழுக்காடு வரை உள்ளது என்கின்றனர் மஞ்சள் ஏற்றுமதியாளர்கள். தேசிய அளவிலான மஞ்சள் சந்தையில், ஈரோடு மஞ்சளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இங்கு சாகுபடி செய்யும் மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருளின் அளவு அதிகம் உள்ளது.
புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் பூசிகின்றனர்.
மாரியம்மன் கோயிலுக்கு தீச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது.
பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவர்.
மஞ்சள் தூளை நீரில் கலந்து பிள்ளையார் பிடித்து குலதெய்வ வழிபாடு.
திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளிப்பர்.
மஞ்சளில் இரு வகைகளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.
உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.
மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.
முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும். வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் நுண்ணியிரியைக் கொல்லும் ஆற்றலே காரணம்.
பொன் நிறம், மஞ்சள் நிறம், வெளிர் பொன் நிறம் உள்ளிட்ட அனைத்து நிற மஞ்சள்களும் ஈரோட்டில் கிடைக்கும் என்பதால் இந்திய மஞ்சள் சந்தை விலை நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் சந்தையாக ஈரோடு சந்தை திகழ்கிறது.
இதனால், மஞ்சளின் நிறம், சுவை, மணம் வேறுபட்டதாக இருக்கும். மேலும், பல்வேறு மருத்துவ குணம் உள்ளதால் இயற்கை மருத்துவம், சித்த மருத்துவத்தில் பலவித நோய்களுக்கு மருந்து தயாரிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு சிறப்பு வாய்ந்த ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என ஈரோடு மஞ்சள் வணிகர்கள், கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மண்ணின் தன்மை, மஞ்சளின் தன்மை, மஞ்சள் விளையும் பகுதிகளின் எல்லை குறித்த ஆவணங்களுடன் சென்னையில் உள்ள இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு படி நிலைகளைக் கடந்து ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரோடு மஞ்சள் உலக அளவில் அறியப்படும் என்பதோடு, விலை உயர்வதுடன், ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மாபெரும் மஞ்சள் வணிகத்திற்கும் சேர்த்தே ஆப்பு அடிக்கவே நடுவண் பாஜக அரசு ஹைட்ரோ கார்பனை முன்னெடுத்தது. என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



