Show all

கருவூரார் சித்தர் பெருஞ்சீற்றப்பதிவு நீங்க! தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழ்மட்டுமே இடம்பெறவேண்டும். சாத்தியமா?

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு தகுந்த முதன்மைத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயிலின் சார்பில் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனு பதிகை செய்யப்பட்டுள்ளது.

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டுவதில் பெரும்பங்காற்றியவர்  கருவூரார் சித்தர். பழந்தமிழகத்தில் தமிழை முன்னெடுத்தவர்கள் இன்று போல்- தமிழை மட்டுமாக இல்லாமல், நான்மறை (காற்றுநாடி, தீநாடி, நீர்நாடி, நிலநாடி அறிதல் கலை) என்கிற மருத்துவக் கலையிலும்- நிமித்தகம், கணியம், மந்திரம், தந்திரம், எந்திரம் என்கிற ஐந்திரம் கலையிலும் புலமையுள்ளவர்களாகவும், அவைகளோடே தமிழை முன்னெடுத்தவர்களாகவும் இருந்தார்கள். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர், இந்தவாறான புலமைபெற்றிருந்தார் என்பதாக, தொல்காப்பிய பாயிரத்தில் பனம்பாரனார் அறிவிக்கின்றார்.  

சோழர் காலத்தில் கருவூரார் சித்தரும் இவ்வகைப் புலமையோடு தமிழை முன்னெடுத்தவராக அறிப்படுகிறார். இதனால், தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டுவதில் பெரும்பங்காற்றினார்  கருவூரார் சித்தர். கோயிலைக் கட்டி முடித்த இராசராச சோழன், பார்ப்பனிய ஆதிக்கத்தை அனுமதித்தவனாக- பெரிய கோயில் குடமுழுக்கின் போது சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதிட அனுமதித்து விட்டான். எவ்வளவு முயன்றும்- தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டுவதில் பெரும்பங்காற்றிய  கருவூரார் சித்தரின் தமிழில் மந்திரம் ஓதியே குடமுழுக்கு செய்ய வேண்டும் என்கிற உத்தரவு மதிக்கப்படவில்லை. கருவூரார் சித்தர் பெருஞ்சீற்றப்பதிவு  சாபமாக இன்று வரை தொடர்கிறது.

இன்று வரை ஆட்சியாளர்கள்- தஞ்சை பெரிய கோயிலில் முற்றாக சமஸ்கிருதத்திற்கு இடம் இல்லை. கருவூரார் சித்தர் விருப்பமே இனி முழுமையாக முன்னெடுக்கப்படும் என்று ஆணையிடவும் முடியாமல், இன்று வரை தஞ்சை பெரிய கோயிலில் சமஸ்கிருதத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிற  ஆட்சியாளர்கள்- கருவூரார் சித்தர் சாபம் என்ன செய்து விட முடியும் என்கிற துணிச்சலும் இல்லாதவர்களாக தஞ்சை பெரிய கோயிலுக்கு புறவழியாக அஞ்சி அஞ்சி வருகை புரிகின்றார்கள்.  

இவ்வாறன நிலையில்- தஞ்சாவூரில் உள்ள இராசராச சோழன் கட்டிய பெரிய கோயிலில் நாளது 22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (05.02.2020) குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அந்தக் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும் என இராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மதுரைக்கிளையில் பொதுநலவழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு தகுந்த முதன்மைத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயிலின் சார்பில் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனு பதிகை செய்யப்பட்டுள்ளது.

பெரிய கோயில் நிருவாகத்தின் சார்பில் அறங்கூற்றுமன்றத்தில் ஒரு குறிப்பு அளிக்கப்பட்டது. அதில், கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பும் அதற்கு 17 ஆண்டுகளுக்கும் முன்பும் நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாக்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின் படியே இந்தத் திருக்குடமுழுக்கு விழாவும் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

அதுதான் தனது பொதுநல வழக்கின் அச்சமே என்பதாக- இதற்கு முன்பாக 22 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போதும் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட்டது என்று மனுதாரர் தரப்பு அறங்கூற்றுமன்றத்தில் கூறியிருந்தது.

கடந்த காலங்களில் குடமுழுக்கு நடந்தபோது, யாரும் பிரச்சனை செய்யவில்லை. தற்போது கோயிலின் நடைமுறை அறியாதவர்கள், இதுபோல சலசலப்பை ஏற்படுத்துகிறார்கள். பெருவுடையார் கோவிலில் நடக்கும் எல்லா பூஜைகளும் திருமுறையும் திருவிசைப்பாவும் இசைத்தே நடத்தப்படுகின்றன.

திருக்குடமுழுக்கு நடக்கும்போது, 12 திருமுறைகளிலும் இருந்து பாடல்கள் பாடப்படும். யாக சாலையில் மட்டுமல்ல, மகாகுடமுழுக்கு நடைபெறும்போதும் இவை பாடப்படும். அதனால், மனுதாரர் இது குறித்து பிரச்சனை எழுப்ப வேண்டியதில்லை. குடமுழுக்கு நிகழ்வில் தமிழுக்கு முதன்மையான இடம் தரப்பட்டிருக்கிறது என்று கோயில் நிருவாகம் தெரிவிக்கிறது.

நேற்று கொடி மரம் நிறுவப்பட்டபோதுகூட, பெரிய கோயில் வார வழிபாட்டுக் குழுவினர் திருமுறைகளை ஓதினார்கள். குடமுழுக்கு விழாவிற்கு ஆலவாய் அண்ணல் அறக்கட்டளைக் குழுவினர், சிதம்பரம் ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை தேவாரப் பாடசாலை ஆகியவற்றுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தானம் கொடுப்பதைப் பொறுத்தவரை, பிராமணர்களுக்கு மட்டுமல்லாமல் ஓதுவார்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன என இந்த கோயில் நிருவாகம் பதிவு செய்த உறுதிமொழியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நாள் குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.