Show all

செல்பேசி பறிமுதல் வழக்கில், முதல்தகவல்அறிக்கை நகல் கேட்டு முருகன் மனு

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச், 24ல், இவரது அறையில் இருந்து, இரண்டு செல்பேசிகள் மற்றும் மின்கலன்களை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, வேலூர் ஜே.எம்., முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வேலூர் கலால் காவல்துறைகண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில், பலத்த காவல் பாதுகாப்புடன், முருகனை வேலூர் ஜே.எம்., முதலாவது நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையின் போது, செல்பேசி பறிமுதல் வழக்கில் போடப்பட்ட, முதல்தகவல்அறிக்கையில் பிழை இருப்பதாக, நீதிஅரசரிடம் முருகன் முறையிட்டார். தனக்கு முதல்தகவல்அறிக்கை நகல் அளிக்க வேண்டும் என, நீதிஅரசரிடம் முருகன் மனு கொடுத்தார். வழக்கை வரும், 25க்கு நீதிஅரசர் அலிசியா ஒத்தி வைத்தார்.

     முருகனைச் சந்தித்து பேச, அவரது தாய் சோமணி வெற்றிவேல், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்திருந்தார். நேற்று வேலூர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த சோமணி, முருகனைச் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், சோமணியை சந்தித்து பேச முடியாதபடி காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு, முருகனை வேகமாக அழைத்து ஜீப்பில் ஏற்றினர். இதனால் மகன் முருகனை சந்தித்து பேச முடியாத ஏக்கத்தில், அவரது தாய் சோமணி கதறி அழுதார். வேனில் இருந்து இதை பார்த்த முருகன், கண் கலங்கியபடி, அழாதீர்கள் என, தாய்க்கு சைகை காட்டி விட்டு புறப்பட்டுச் சென்றார்.

     பின் தாய் சோமணி நிருபர்களிடம் கூறியதாவது: சிறையில் இருக்கும் என் மகன் முருகனைச் சந்திக்க, இலங்கையில் இருந்து வந்தேன். அவரை சந்திக்க அனுமதி மறுக்கின்றனர். நீதிமன்ற வளாகத்திலாவது சந்தித்து பேசலாம் என்றால், காவல்துறையினர் அதற்கும் அனுமதிக்க மறுக்கின்றனர். வரும், 29ல் என் விசா முடிந்து விடுவதால், இலங்கைக்கு சென்று விட வேண்டும். நான் இறப்பதற்குள், ஒரு முறையாவது முருகனைச் சந்தித்து பேச வேண்டும். இதற்கு ஆண்டவன் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.